நேருக்கு நேர் மோதிய ரயில்கள்! 29 பேர் பலி! 85 பேர் படுகாயம்! கிரீஸ் நாட்டில் நடந்த சோகம்!
லரிசா நகரின் தெம்பி பகுதியில் 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த சரக்கு ரெயில் மோதியதில் 29 பேர் பலியானதோடு, 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் ஏதென்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு பயணிகள் ரயில் சென்றுகொண்டிருந்தது. 350 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அந்த ரயில் லரிசா நகரின் தெம்பி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே சரக்கு ரயில் ஒன்று படுவேகமாக வந்த நிலையில், ஒன்றோடொன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.
இரு ரயில்களும் வேகமாக மோதியதால், பயணிகள் ரயிலின் பெட்டிகள் சில தண்டவாளத்தை விட்டு வெளியே கவிழ்ந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. அதில் 3 பெட்டிகள் வெடிக்கவும் செய்தது.
இந்த பயங்கர விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மீட்புப்பணிகள் நடந்துவரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் எனவும் கூறப்படுகிறது.
படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கிரீஸ் நாட்டில் நடந்த இந்த கோர விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.