சென்னை, மாதவரம் மாத்தூர் 200 அடி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் எச்சரித்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சுமார் 29 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். போலீஸார் உடலைக் கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பினர்.
இறந்தவர் எண்ணூர் சுனாமி நகரைச் சேர்ந்த சனா என அடையாளம் காணப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
மாத்தூர் 200 அடி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறத்தில் இருந்த அந்த இடமானது வெகுநாட்களாகப் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட இடங்களில் ஒன்றாக இருந்ததால் திருநங்கை உள்ளே இறந்து கிடந்ததை முதலில் எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நேரம் ஆக ஆக அந்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கவே பிறகு தான் அக்கம் பக்கத்தினர் அந்த இடத்தில் நாற்றம் வரக் காரணம் என்ன என யோசிக்கத் தொடங்கினர். அதையொட்டிய நடவடிக்கையாக அடுத்தபடியாக உடனடியாக அவர்கள் போலீஸாருக்குத் தகவல் அனுப்பினர். போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து சோதனையில் ஈடுபட்ட பின்னரே திருநங்கை கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
சடலமாகக் கைப்பற்றப்பட்ட திருநங்கையின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மாதவரம் பால் காலனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட திருநங்கை ஒரு பாலியல் தொழிலாளி என்றும் அவரது வாடிக்கையாளர்களில் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
குடும்ப ஆதரவு, சமூக ஆதரவு அல்லது மாநில பாதுகாப்பு இல்லாத திருநங்கைகள் அதிகளவில் கொலை செய்யப்படுகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள் என்று டிரான்ஸ் உரிமை ஆர்வலர் கிரேஸ் பானு கூறினார்.