சாலைகளில் திரியும் மாடுகளால் பயணிகள் அவதி... அபராத எச்சரிக்கை!

சாலைகளில் திரியும் மாடுகளால் பயணிகள் அவதி... அபராத எச்சரிக்கை!

மீபத்தில் பள்ளி விட்டு வந்த சிறுமியை சாலையில் சென்ற மாடு ஒன்று விடாமல் முட்டி கால்களால் மிதித்த காட்சிகள் மனதை கலங்க வைத்ததை அறிவோம். தற்போது படுகாயமுற்ற அந்த சிறுமி சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக தகவல் வருகிறது. என்றாலும் இந்த நிகழ்வு அந்த சிறுமியின் மனதில் காலத்துக்கும் மாடுகள் மீதான அச்சத்தை ஏற்படுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதுதானே நிஜம்!

இது போன்று மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடுகளை அவிழ்த்து விடுவோருக்கு எச்சரிக்கை தந்துள்ளார் சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல ஆய்வாளர் சரவணன். “கால்நடைகளை சாலைகளை அவிழ்த்து விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கால்நடைகளை அவர்களின் இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். சாலைகளில் கால்நடைகளை அவிழ்த்து விட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

 சேலம் மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. கோயில்களில் வேண்டுதலை வைக்கும் பக்தர்கள் மாடுகளை சாலையில் விட்டு விடுகின்றனர். இதைத் தவிர குதிரை, கழுதை போன்ற கால்நடைகளும் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக சேலத்தின் நெரிசல் மிகுந்த மைய இடங்களான வ.உ.சி. காய்கறி மார்க்கெட், திருவள்ளுவர் சிலை, சின்னக் கடை வீதி முதல் அக்ரஹாரம், அருணாச்சலம் ஆசாரி தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட், திருமணிமுத்தாறு பகுதி, கலெக்டர் அலுவலகம்  உட்பட பல பகுதிகளில்  50க்கும் மேற்பட்ட காளைமாடுகள்  சுற்றித் திரிகின்றன.

இந்த மாடுகள் சில நேரங்களில் சாலைகளின் நடுவில் படுத்துகொள்கின்றன. சில சமயங்களில் ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக்கொள்கிறது. அப்போது அவ்வழியாக வாகனங்களில் வருபவர்கள் மீது மோதியும் விடுகிறது. இதனால் பலர் பயந்து வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதைக் கண்டித்த சமூக ஆர்வலர்கள் “கால்நடைகளை வேண்டுதலுக்கு விடும் பக்தர்கள் அவற்றை சம்மந்தப்பட்ட கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும். கோயில் நிர்வாகம் அந்த கால்நடைகளை கோசாலையில் வைத்து பராமரிப்பது அவசியம். அதுவே சரியானதும்கூட. கால்நடைகளின் வளர்ப்பவர்கள் சிலர் அவர்களுக்கு சரியான முறையில் உணவு கொடுக்க முடியாததால் சாலைகளில் திரிய விடுகின்றனர். அவ்வாறு சாலையில் கால்நடைகளை விடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று வலியுறுத்தினர்.

இதையடுத்தே சுகாதார ஆய்வாளரும் எச்சரிக்கை செய்துள்ளார். இனியாவது கால்நடைகளை வளர்ப்பவர்கள் பொறுப்புடன் இருப்பது அனைவருக்கும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com