
கிண்டி, தாம்பரம் சானட்டோரியம் தடத்தில், ஜனவரி முதல் தற்பொழுது வரையில், மின்சார ரயில்களின் படிக்கட்டுகளில் பயணித்த 301 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில் நிலையங்களில், பண்டிகை காலங்கள் என்பதால் பயணியர் வருகை அதிகரித்து வரும் நிலையில், ரயில் நிலைய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் பணிகள் தீவிரப்படுத்த, ரயில்வே பாதுகாப்பு படை சென்னை கோட்ட முதன்மை ஆணையர் செந்தில் குமரேசன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, பரங்கிமலை ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் விஜயகுமார், "தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், பயணியர் வருகை சற்று அதிகமாக இருக்கிறது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். குறிப்பாக, பெண் பயணியருக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில், தனிப்படை அமைத்து கண்காணித்து வருகிறோம்.
ரயில்களின் படிக்கட்டுகளில் பயணம் செய்வது, நடைமேடைகளில் கால்களை உரசி செல்வது, கூரை மீது பயணம் செய்து, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதை தடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கிண்டி, தாம்பரம் சானட்டோரியம் வரையில், இந்த ஆண்டில் இதுவரையில் 301 வழக்குகள் பதிவு செய்து, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். தொடர்ந்து பாதுகாப்ப விதிகளை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.