மணிப்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண உதவுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பழங்குடியினர் அமைப்பினர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடித்த்தில் அவர்கள் கூறியுள்ளதாவது: “வன்முறையை நாங்கள் விரும்பவில்லை. வன்முறைக்கு காரணம் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான மாநில அரசுதான். திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். இரு தரப்பினரும் இனி சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை. எனவே பழங்குடியனரான எங்களுக்கு தனி நிர்வாக வேண்டும் என்று கோருகிறோம். தற்போதைய சூழலில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அங்கு அமைதி திரும்ப வழியேற்படும். எங்கள் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று தீர்வுகாண உதவுங்கள் என்று அந்த கடிதத்தில் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.கடந்த மே மாதம் 3 ஆம் தேதியிலிருந்து மணிப்பூர் இனமோதல்களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் 53 சதவீதம் மக்கள்தொகை கொண்ட மெய்டிஸ் சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதற்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குக்கி வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வன்முறை, கலவரத்துக்கு இதுவரை 120 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 300-க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். வன்முறை தாக்குதல் மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 40,000-த்துக்கும் மேலானவர்கள் வேறு இடங்களில் பாதுகாப்புதேடி தஞ்சமடைந்துள்ளனர். சுமார் 2,000 வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்துக்கு இரண்டுநாள் பயணமாகச் சென்ற ராகுல் காந்தி, வியாழக்கிழமை சூரசந்திரபூர் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார்.
ஆனால், ராகுல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்ற வாகனத்தை போலீஸார் விஷ்ணுபூரில் தடுத்து நிறுத்தினர். வன்முறை ஏற்படலாம் என்ற காரணத்தை ராகுல் மற்றும் அவருடன் சென்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸார் கூறினர்.இதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல்காந்தி, பின்னர் ஹெலிகாப்டரில் நிவாரண முகாம்களுக்கு சென்று அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்றனர். நிவாரண முகாமில் குழந்தைகளுடன் சேர்ந்து ராகுல் மதிய உணவு சாப்பிட்டார்.
முன்னதாக இம்பாலில் இருந்து 20 கிமீ. தொலைவில் உள்ள விஷ்ணுபூரில், ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ராகுல் காந்தியே திரும்பிப் போ” என்று சிலர் முழக்கமிட்டனர். ராகுல்காந்தியின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதை கண்டித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்கார்ர்களை கலைக்க போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். மீண்டும் கலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தான் ராகுல்காந்தியின் வாகனத்தை தடுத்து நிறுத்தினோம். சிலர் ராகுல் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனத்தை பார்த்து கலகக்கார்ர்கள் தாக்கவருவதாக நினைத்து வன்முறையில் ஈடுபடலாம். ராகுல்காந்தியின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என்பதால் அவரை தடுத்து நிறுத்தினோம் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சகோதர்ர்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஆறுதல் கூறவே நான் இங்குவந்தேன். அவர்கள் என்னை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். ஆனால் போலீஸார்தான் காரணமில்லாமல் என்னை தடுத்துவிட்டனர். மணிப்பூரில் அமைதி திரும்புவதுதான் முக்கியம் என்று ராகுல்காந்தி கூறினார்.