திருச்சி குறைதீர்கும் கூட்டத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்த ஆட்சியர்!

திருச்சி குறைதீர்கும் கூட்டத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்த ஆட்சியர்!
Published on

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மக்களுக்கு பிபி, சுகர் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர் கூட்டம் என்பது வெறும் சம்பிரதாய நிகழ்வு மட்டும் அல்ல. மனு அளிக்க வரும் மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரோ அல்லது அவருக்கு கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளோ நேரடியாகத் தலையிட்டு, அனைத்து துறை அதிகாரிகள் உள்ள அவையில் சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு பிரச்சனையை கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பு தான் குறைதீர்க்கும் கூட்டம்.

இந்த கூட்டம் மனு அளிக்க வரும் மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை. அழுகைகளுடனும், வேதனைகளோடும் கண்களில் கண்ணீர் ததும்ப வரும் மக்கள் நம்பிக்கை. இதனாலையே வயது வரம்பின்றி ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் என்று எல்லா நிலை மனிதர்களும் தங்களுடைய குறைகளை கொட்டி தீர்க்க, அதற்கான தீர்வை எதிர்பார்த்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு வருகின்றனர்.

இப்படி வலிகளோடும் வேதனைகளோடும் வரும் மக்கள் பல நேரங்களில் மயக்கம் போட்டு விழுவதும், தற்கொலை முயற்சியில் ஈடுபட முயற்சிப்பதும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வு என்றாலும் அதை எளிதில் கடந்து விட முடியாது.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளிக்க வந்த பெண் ஒருவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் சிறப்பு மருத்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 108 அவசர உறுதி பணியாளரால் மனு அளிக்க வருபவர்களுக்கு பிபி, சுகர் ஆகியவை கண்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதை மனு அளிக்க வரும் எண்ணற்ற மக்கள் பயன்படுத்தி சென்றனர். மேலும் இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com