திருச்சி ரயில் நிலையம் விரிவாக்கம் : 8வது நடைமேடை உருவாக்கம்!

திருச்சி ரயில் நிலையம் விரிவாக்கம் : 8வது நடைமேடை உருவாக்கம்!

திருச்சி ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு 8வது நடைமேடை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டின் 2வது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்று பேசினார். இப்படி, திருச்சி தமிழ்நாட்டின் முக்கியமான நகர்ப்பகுதிகளில் ஒன்றாக அன்று முதல் இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த நிலையில், திருச்சி நாளுக்கு நாள் அடைந்து வரும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக திருச்சி தலைமை ரயில் நிலையமும் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது திருச்சி தலைமை ரயில் நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வந்த 8வது நடைமேடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் நீளம் 620 மீட்டர் ஆகும். இந்தப் புதிய நடைமேடை மூலம் 26 பெட்டிகளைக் கொண்ட ரயிலை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி ரயில் நிலையத்தில் 13.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நடைமேடை மற்றும் தண்டவாளம் எண் 10 அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதிய நடைமேடையில் 18 புதிய சிக்னல் கம்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ரயில் கிராசிங் மற்றும் சிக்னல் விரைவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதோடு, 8வது நடைமேடை வழியாக கல்லுக்குழி பகுதியில் இருந்து ரயில் நிலையத்துக்குள் செல்லும் வகையில் 2வது புதிய வழி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தினத்தந்தி அலுவலகம் எதிரே உள்ள வழியும் புனரமைக்கப்பட்டு பிரம்மாண்டமாகக் காட்சி அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com