திருச்சி - ஸ்ரீரங்கம் பாலம் ரெடி - செல்பி எடுக்க தயாராகும் ஸ்ரீரங்கத்துவாசிகள்! ஆறு மாதத்தில் பணியை முடித்து அசத்தியிருக்கும் மாநகராட்சி!

திருச்சி - ஸ்ரீரங்கம் பாலம் ரெடி - செல்பி எடுக்க தயாராகும் ஸ்ரீரங்கத்துவாசிகள்! ஆறு மாதத்தில் பணியை முடித்து அசத்தியிருக்கும் மாநகராட்சி!

திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்திருக்கிறார். ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற மராமத்து பணிகளுக்கு பிறகு, முழுமையான பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது.

தென்மாவட்டம் செல்லும் பயணிகளுக்கு திருச்சி பாலத்தை தெரியாமல் இருக்க முடியாது. ரயில், பேருந்து எதுவாக இருந்தாலும் திருச்சி காவிரி பாலத்தை கடக்காமல் தென் தமிழ்நாட்டிற்கு செல்ல முடியாது. திருச்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான காவிரி பாலம், திருச்சிவாசிகளின் மனதுக்கு நெருக்கமானது.

1976ல் திருச்சி மாநகரத்தையும் - ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் பல்வேறு முறை பராமரித்து பணிகள் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால், முதல் முறையாக காவிரி பாலம் முழுமையாக ஆறு மாதங்கள் வரை மூடப்பட்டதுதான் இதுதான் முதல் முறை.

பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் பலமுறை சீர் செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்து பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டு வந்தன. நிரந்தரமான தீர்வு தரப்படவேண்டும் என்பது திருச்சிவாசிகளின் நீண்டநாளைய கோரிக்கையாக இருந்தது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், அமைச்சர் நேரு தலைமையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. காவிரி பாலத்தை சீரமைக்காக ரூ.6 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையெடுத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் உடனே ஆரம்பிக்கப்பட்டன. காவிரி பாலம் இல்லாத காரணத்தால் திருச்சி நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாலம் மூடப்பட்டது. பின்னர் 2 மீட்டர் இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். கார் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பைபாஸ் வழியாக ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டது.

இந்நிலையில் இன்று பணிகள் முடிக்கப்பட்டு அமைச்சர் கே.என் நேரு பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்திருக்கிறார்.

செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சென்ற ஆண்டு ரூ. 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் புதிய பாலங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. அது போல், கூடுதலாக இன்னொரு பாலத்தை திருச்சி காவிரி பகுதியில் கட்டவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com