ராகுல் காந்திக்கு பிரதமர் பதவி வகிப்பதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாதான்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், தில்லி உள்பட பல மாநிலங்களைக் கடந்த தற்போது ஹரியானாவில் நுழைந்துள்ளது. மொத்தம் 3,750 கி.மீ. தொலைவு கொண்ட இந்த யாத்திரையில் 3,000 கி.மீ. பயணம் முடிந்துள்ளது. ஜனவரி மாத இறுதியில் காஷ்மீரில் பயணம் முடிவடைகிறது.
ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் என பல்வேறு பிரமுகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தில்லியில் ராகுல் யாத்திரையில் பங்கேற்று அவருக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். முன்னாள் ராணுவ தளபதி தீபக் கபூரும், ஹரியாணாவில் ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்று ராகுலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி பா.ஜ.க.விலிருந்து விலகி, பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அங்கும் நீடிக்காமல் தற்போது திரிணமூலம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அசன்சால் தொகுதி எம்.பி.யாக இருக்கும் நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாதான், ராகுலுக்கு பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். அவர் இப்போது முற்றிலும் மாறிவிட்டார். அவரது புகழை கெடுக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் அவர் ஒரு நல்ல தலைவராக உருவாகி வருகிறார்.
ராகுலின் ஒற்றுமை யாத்திரைக்கு மக்கள் ஆதரவு இருப்பது உண்மை. பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர் சந்திரசேகர் ஆகியோர் நடத்திய யாத்திரைக்கு இணையானது. வரும் 2024 தேர்தலில் இதன் தாக்கம் எதிரொலிக்கும். அவரது நோக்கம் நிறைவேற எனது வாழ்த்துகள்.
ராகுலின் குடும்பத்தினர் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு உழைத்ததை யாரும் மறுக்க முடியாது. கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் நாட்டிற்காக என்ன செய்தது என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியது. ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களை கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு இரும்பு மங்கை. அவரை யாரும் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நாட்டை ஆளப்போவது யார் என்பதில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் சத்ருகன் சின்ஹா குறிப்பிட்டார்.