மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி!

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி!
Published on

மேற்குவங்க மாநிலத்தில் வன்முறைகளுடன் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 34,000 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

கிராம பஞ்சாயத்து தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 34,359 இடங்களை வென்றுள்ளது. மேலும் 752 இடங்களில் முன்னிலையில் உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க. இதுவரை 9,545 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேலும் 180 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 63,299 கிராமப் பஞ்சாயத்து இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சி 2,885 இடங்களில் வென்றுள்ளது. மேலும் 96 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 2,498 இடங்களை கைப்பற்றியுள்ளது. 72 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் நடந்ததைத் தவிர பொதுவாக வாக்கு எண்ணிக்கை அமைதியாகவே நடைபெற்றது. பாங்கர் என்னுமிடத்தில் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. அங்கு வன்முறை கும்பலை கலைக்க போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர்.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 6,134 பஞ்சாயத்து சமிதி இடங்களில் வென்றது. மேலும் 61 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. 939 இடங்கை கைப்பற்றியதுடன் 149 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் 165 இடங்களில் வென்று 14 இடங்களில் முன்னிலையும், காங்கிரஸ் 244 இடங்களில் வென்று 7 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளன. மொத்தம் 9,728 பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ஜில்லா பரிஷத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இதுவரை 554 இடங்களை வென்றுள்ளது 201 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. 19 இடங்களில் வென்று 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மார்க்சிஸ்ட் 2 இடங்களில் வென்று மேலும் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 4 இடங்களில் வென்று மேலும் 10 இடங்களில்

முன்னிலையில் உள்ளது. மொத்தம் 928 ஜில்லா பரிஷத்துகள் உள்ளன.

பஞ்சாயத்து தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற உதவியதற்காக மக்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நன்றிதெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் பெருவெற்றி பெற்றுள்ளதற்கு மக்களின் ஆதரவுதான் காரணம் எனவே அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தில் மக்கள் ஆதரவு எங்களுக்கே உள்ளது என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது என்றும் மம்தா பானர்ஜி தாம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தனர்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின்போது நடைபெற்ற வன்முறைக்கு 15 பேர் பலியானார்கள். அவர்களில் 11 பேர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து கணக்கிட்டு பார்த்தால் தேர்தல் தொடர்பான வன்முறைக்கு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

வன்முறை, வாக்குச்சாவடி முற்றுகை மற்றும் வாக்குப்பெட்டிகள் உடைப்பு உள்ளிட்ட சம்பவங்களை அடுத்து 696 இடங்களில் கடந்த திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

பஞ்சாயத்துத் தேர்தலில் வன்முறை என்பது மேற்குவங்கத்தில் ஒன்றும் புதிது அல்ல. கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறைக்கு 40 பேர் பலியானார்கள்.

தேர்தல் வெற்றியை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், நடனம் ஆடியும் கொண்டாடினர்.

மூன்று அடுக்கு தேர்தல் முறையில் 74,000 கிராமப் பஞ்சாயத்துகள், 9730 பஞ்சாயத்து சமிதிகள், 928 ஜில்லா பரிஷத் இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணி 22 மாவட்டங்களில் 339 மையங்களில் நடைபெற்றது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மத்திய, மாநில போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com