
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்டவற்றை கடுமையாக எச்சரித்துள்ளார். அவர், இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில், குறிப்பாக இந்தியாவில் ஊழியர்களை பணியமர்த்துவதை நிறுத்தி, அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். புதன்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற AI மாநாட்டில் பேசிய டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் ஆலைகளை கட்டுவதையும், இந்திய தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வேலை வழங்குவதையும் கண்டித்தார். “அமெரிக்க சுதந்திரத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதித்த நிறுவனங்கள், தங்கள் சொந்த நாட்டு மக்களை புறக்கணித்து வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன. எனது ஆட்சியில் இதற்கு முடிவு கட்டப்படும்,” என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.
டிரம்ப், தொழில்நுட்ப துறையின் “உலகமயமாக்கல் மனப்பான்மை” அமெரிக்கர்களை புறக்கணிக்கிறதாக விமர்சித்தார்.
“சிலிக்கான் பள்ளத்தாக்கைத் தாண்டி, AI போட்டியில் வெற்றி பெற, புதிய தேசிய உணர்வு மற்றும் நாட்டுப்பற்று தேவை,” என்று அவர் குறிப்பிட்டார். அவர், அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் ஆலைகளை கட்டி, இந்தியாவில் ஊழியர்களை பணியமர்த்தி, ஐர்லாந்தில் லாபத்தை சேமித்து வருவதாகவும், அதே நேரத்தில் அமெரிக்க குடிமக்களை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். “நாங்கள் விரும்புவது ஒரு விஷயம் மட்டுமே—அமெரிக்காவை முதலிடத்தில் வைக்க வேண்டும்,” என்று அவர் அழைப்பு விடுத்தார்.
இந்த AI மாநாட்டில், டிரம்ப் மூன்று நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். முதலாவது உத்தரவு, “Winning the Race” என்ற திட்டத்தின் கீழ், அமெரிக்காவை AI துறையில் முன்னிலைப்படுத்துவதற்கு தேவையான தடைகளை நீக்கி, டேட்டாசென்டர்களை விரைவாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
இரண்டாவது உத்தரவு, அரசு நிதியுடன் AI-ஐ உருவாக்கும் நிறுவனங்களுக்கு பொருந்தும், இதன் மூலம் AI கருவிகள் அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. டிரம்ப், “வேக்” AI மாதிரிகளுக்கு எதிராகவும், முந்தைய நிர்வாகத்தின் பன்மைத்துவ கொள்கைகளுக்கு எதிராகவும் பேசினார். “AI துல்லியமாகவும், அரசியல் செறிவற்றதாகவும் இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். இந்த விதிகள் அரசு நிறுவனங்களின் AI-க்கும் பொருந்தும்.
மூன்றாவது உத்தரவு, அமெரிக்க உற்பத்தி AI கருவிகளை உலகளவில் போட்டியிடுவதற்கு ஏற்றவாறு ஏற்றுமதியை ஊக்குவிப்பதையும், AI-யின் முழு வளர்ச்சியை அமெரிக்காவுக்குள் மட்டுமே உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது. டிரம்ப், “Artificial Intelligence” என்ற பெயருக்கு பதிலாக “Genius” என்று அழைப்பதை விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இந்த மாற்றங்கள் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இந்திய IT தொழிலாளர்கள் மற்றும் ஆஸ்ரோசிங் நிறுவனங்களுக்கு எதிர்கால சவால்களை உருவாக்கலாம் என்றார். பொறுத்திருந்து பார்ப்போம்.