

உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC), கடந்த சில நாட்களாக விழி பிதுங்கி நிற்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் தான்:
அமெரிக்காவின் தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் . ஒரு தவறான எடிட்டிங்க்காக, BBC மீது சுமார் ₹8,879 கோடி (1 பில்லியன் டாலர்) இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர போவதாக அறிவித்துள்ளார்.. ₹8,879 கோடி(1 பில்லியன் டாலர்)!
உலகின் மிக நம்பகமான ஊடகங்களில் ஒன்று, தான் செய்த ஒரு 'சின்ன' தவறுக்காக, டிரம்ப்பிடம் மன்னிப்புக் கோர வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டதோடு, அதன் தலைமைப் பொறுப்புகளும் ஆட்டம் காணும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அந்த 'சின்ன' தவறு, எப்படி இவ்வளவு பெரிய பணத் தொகையையும், தலைவர்களின் ராஜினாமாக்களையும் ஏற்படுத்தியது என்று பார்ப்போம்.
ஆரம்பப் புள்ளி: ஒரு சர்ச்சை எடிட் VS டிரம்ப்பின் அதிரடி!
பிபிசி-யின் நடப்பு விவகார நிகழ்ச்சியான 'பனோரமா' (Panorama), 2024 அதிபர் தேர்தலுக்கு முன் "டிரம்ப்: இரண்டாவது வாய்ப்பா?" என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியது.
இங்குதான் விபரீதமே ஆரம்பித்தது. ஜனவரி 6, 2021 அன்று டிரம்ப் ஆற்றிய ஒரு உரையிலிருந்து சில வரிகள் எடுக்கப்பட்டு, அவை ஒன்றாக இணைக்கப்பட்டன.
டிரம்ப் தனது ஆதரவாளர்களை "நரகத்தைப் போலப் போராட" (fight like hell) தூண்டுவதுபோல அந்த எடிட்டிங்கில் காட்டப்பட்டது. ஆனால், உண்மையில், அவர் "அமைதியாகப் போராட" வேண்டும் என்று தான் குறிப்பிட்டிருந்தார்.
இந்த 'அமைதி' வார்த்தையை நீக்கி, வெவ்வேறு பிரிவுகளில் பேசிய வரிகளைத் திட்டமிட்டுக் கோர்த்தபோது, அது வன்முறையைத் தூண்டுவது போலத் தோன்றியது.
ஒரு சில நொடி தவறுக்கு டிரம்ப் வைத்த ₹8,879 கோடி விலை
ஆவணப்படம் ஒளிபரப்பாகி, அது தனக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகக் கொதித்தெழுந்த டிரம்ப், பிபிசி-க்கு நேரடியாகச் சவால் விட்டார்.
அவருக்கு ஏற்பட்ட இழப்புக்குக் குறைந்தபட்சம் ₹8,879 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார்.
டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்த பிபிசி, தனது தலைவர் சமீர் ஷா மூலம் தனிப்பட்ட கடிதம் எழுதி வருத்தம் தெரிவித்தது.
அதே சமயம், டிரம்ப்பின் ₹8,879 கோடி கோரிக்கையை சட்ட ரீதியாக திட்டவட்டமாக நிராகரித்தது.
சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை மீண்டும் ஒளிபரப்ப மாட்டோம் என்றும் உறுதி அளித்தது.
உயர்மட்ட ராஜினாமாக்களும் நிதி நெருக்கடியும்
இந்தச் சர்ச்சை ஊடகத்தின் உள்ளேயே "நிறுவன ரீதியிலான பாரபட்சம்" இருப்பதாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பியது .
இதன் விளைவாக, பிபிசி-யின் தலைமை இயக்குநர் டிம் டேவி மற்றும் செய்திப் பிரிவின் தலைமை அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
சட்ட நிபுணர்கள் டிரம்ப்பின் வழக்கு வெற்றிபெற வாய்ப்பில்லை எனக் கருதினாலும், வெறும் சில விநாடிகளில் செய்யப்பட்ட ஒரு தவறான எடிட்டிங், பிபிசி-யின் நற்பெயருக்குக் கொடுத்த விலை மிக அதிகம்.
ஒருபுறம் அதன் தலைமைப் பொறுப்புகள் ஆட்டம் கண்டன, மறுபுறம் ₹8,879 கோடி இழப்பீடு எனும் நிதி நெருக்கடியும் டிரம்ப் உருவாக்கிவிட்டார்.
ஒரு தகவலை வெளியிடும்போது, அதன் உண்மைத்தன்மையை மட்டுமல்லாமல், சிறு எடிட்டிங் அல்லது காட்சி அமைப்பில்கூட எவ்வித பாரபட்சமோ, தவறான புரிதலோ ஏற்பட்டுவிடாமல் இருக்க, ஊடகங்கள் இனி அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஏனெனில், ஒரு சில நொடி தவறு கூட பில்லியன் டாலர் விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.