அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், வெளியுறவுத்துறையில் 1,300க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இது நிர்வாக மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் அதிரடி நடவடிக்கை என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணிநீக்கங்கள் அமெரிக்காவின் உலகளவில் அதன் பெரும் செல்வாக்கைக் கடுமையாகப் பாதிக்கும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவுத்துறை அனுப்பிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த நடவடிக்கையால் 1,107 உள்நாட்டு சிவில் சேவை ஊழியர்களும், 246 வெளிநாட்டு சேவை அதிகாரிகளும் பாதிக்கப்படுவார்கள். இந்தப் பணிநீக்கங்கள் அமெரிக்காவின் அரசு ஊழியர் எண்ணிக்கையை சுமார் 15% குறைக்க டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
டிரம்ப் நிர்வாகம் தனது "அமெரிக்கா முதலில்" (America First) என்ற கொள்கைக்கு ஏற்ப வெளியுறவுத்துறையை மறுசீரமைக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தேவையற்ற அலுவலகங்களை நீக்குதல், ஒரே மாதிரியான பணிகளை ஒன்றிணைத்தல் மற்றும் துறையின் முக்கிய பணிகளில் கவனம் செலுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணிநீக்கம் செய்யப்பட்ட வெளிநாட்டு சேவை அதிகாரிகள் 120 நாட்கள் நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும், பெரும்பாலான சிவில் சேவை ஊழியர்களுக்கு 60 நாள் பிரிவினைக் காலம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு வலுவான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. செனட் வெளியுறவு உறவுகள் குழுவின் அனைத்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோவுக்கு எழுதிய கடிதத்தில், "அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு அதிகரித்து வரும் சவால்களின் இக்கட்டான நேரத்தில், இந்த நிர்வாகம் நமது இராஜதந்திரப் படையைப் பலப்படுத்த வேண்டுமே தவிர, பலவீனப்படுத்தக் கூடாது." என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பணிநீக்கங்கள், "உக்ரைனில் நடந்து வரும் போர், இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல், போன்ற உலகளாவிய ஸ்திரமின்மையின் மத்தியில் அமெரிக்காவின் ராஜதந்திர திறனைக் குறைக்கும் என்று அமெரிக்க வெளியுறவு சேவை சங்கம் (AFSA)" கவலை தெரிவித்துள்ளது.
இந்த பணிநீக்கங்களுக்கு எதிரான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் டிரம்ப் நிர்வாகத்தின் பெரிய அளவிலான பணிநீக்கத் திட்டத்திற்கு அனுமதி அளித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.