

அமெரிக்க நாடாளுமன்றம் அரசாங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத் தவறும்போது அரசு முடக்கம் (Govt Shutdown) ஏற்படுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் அத்தியாவசியமற்ற அரசு ஊழியர்கள் ஊதியமின்றி வீட்டிற்கு அனுப்பப்படுவர். ராணுவ வீரர்கள் போன்ற அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்களுக்கும் ஊதியம் வழங்குவதில் தாமதம் அல்லது நிறுத்தம் ஏற்படும்
அடேங்கப்பா! இவ்வளவு பெரிய தொகையா?
அரசு முடக்கம் காரணமாக ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக, ஒரு அநாமதேயப் பணக்காரர் அமெரிக்க அரசுக்கு நேரடியாக சுமார் ₹ 1,147.5 கோடி (130 மில்லியன் டாலர்கள்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இந்தச் செய்தி அந்நாட்டின் அரசியல் மற்றும் நிதி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிகப்பெரிய நன்கொடையை டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஆனால், கொடையாளியின் பெயரை அவர் வெளியிடவில்லை. அவர் அந்த நபரை "தேசபக்தர்" (Patriot) மற்றும் "நண்பர்" என்று மட்டுமே வர்ணித்தார்.
மர்மத்தைக் கலைத்த பெயர்: மெலன் வம்சத்தின் வாரிசு
பல ஊகங்களுக்குப் பிறகு, ட்ரம்ப் நிர்வாகத்துடன் நெருங்கிய வட்டாரங்கள் அந்தக் கொடையாளியின் பெயரை வெளியிட்டுள்ளன. அவர்தான்: திமோதி மெலன் (Timothy Mellon).
மெலன் வெளியுலகில் அதிகம் அறியப்படாத செல்வந்தர் மற்றும் புகழ்பெற்ற மெலன் வங்கியியல் குடும்பத்தின் வாரிசு ஆவார்.
இவர் ஒரு ரயில்வே அதிபராகவும் உள்ளார்.
ட்ரம்ப்-ன் முக்கிய நிதி ஆதரவாளர்களில் ஒருவரான இவர், ட்ரம்ப்-ன் பிரச்சாரத்தை ஆதரிக்கும் குழுக்களுக்கு ஏற்கெனவே கோடிக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் ட்ரம்ப்-ஐ ஆதரிக்கும் அரசியல் நடவடிக்கைக் குழுவுக்கு சுமார் ₹ 441.3 கோடி (50 மில்லியன் டாலர்கள்) தொகையை வழங்கினார்.
மெலன், அமெரிக்க முன்னாள் கருவூலச் செயலாளர் (Treasury Secretary) ஆண்ட்ரூ டபிள்யூ. மெலனின் பேரன் ஆவார்.
ட்ரம்புக்குப் பிடித்த "தேசபக்தர்"
தன்னுடைய சுற்றுப்பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், மெலன்-இன் பெயரை வெளிப்படுத்த மறுத்துவிட்டார்.
"அவர் விளம்பரத்தை விரும்பவில்லை. அவர் ஒரு சிறந்த அமெரிக்கக் குடிமகன், ஒரு மகத்தான மனிதர்," என்று அவர் மலேசியாவுக்குப் புறப்படும்போது கூறினார்.
அதே சமயம், இந்த நன்கொடையை பென்டகன் ஏற்றுக்கொண்டது.பென்டகனின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னல் இதை உறுதிப்படுத்தினார்.
அவரின் கூற்றுப்படி, இந்த நன்கொடை ஒரு நிபந்தனையுடன் ஏற்கப்பட்டது.
அது — ராணுவ வீரர்களின் சம்பளம் மற்றும் சலுகைகளுக்கான செலவுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
ஒரு சலசலக்கும் சட்டச் சிக்கல்
இந்த நன்கொடை மிகப்பெரியது என்றாலும், அமெரிக்க ராணுவத்தில் உள்ள 1.3 மில்லியனுக்கும் அதிகமான வீரர்களின் மொத்த ஊதியத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், ஒரு சேவை உறுப்பினருக்கு சுமார் ₹ 8,827 (100 டாலர்கள்) வரை ஊதியத்தை ஈடுசெய்ய இது உதவும் எனக் கணக்கிடப்படுகிறது.
மிக முக்கியமாக, ஒரு தனிப்பட்ட நபர் அரசுக்கு நேரடியாக நிதியளிப்பது என்பது, "பற்றாக்குறைத் தடுப்புச் சட்டம்" (Antideficiency Act) என்ற கூட்டாட்சி சட்டத்தை மீறுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
பற்றாக்குறைத் தடுப்புச் சட்டம் (Antideficiency Act) என்றால் என்ன? இந்தச் சட்டம் அமெரிக்க அரசு நிதியைக் கட்டுப்படுத்தும் முக்கியச் சட்டமாகும்.
அரசாங்கத்தின் செலவுகள் நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) அங்கீகாரத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்பதை இது உறுதி செய்கிறது.
இந்தச் சட்டம் அரசாங்கத்தின் மூன்று விதமான செயல்களைத் தடை செய்கிறது:
நிதிக்கு மேல் செலவிடுதல்: நாடாளுமன்றம் ஒதுக்கிய தொகையை விட அதிகமாகச் செலவு செய்யக்கூடாது.
அங்கீகாரம் இல்லாமல் சேவை பெறுதல்: நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காத தன்னார்வச் சேவைகளை (Voluntary Services) அரசு ஏற்கும் உரிமை இல்லை.
அரசாங்கத்தின் பணப்பற்றாக்குறை இருந்தபோது, மெலன் ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்க நன்கொடை அளித்தது, இந்தச் சட்டத்தின் இரண்டாவது பகுதியை மீறுவதாக இருக்கலாம் எனச் சட்ட வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் செலவு ஒப்புதல்களை உருவாக்குதல்: எதிர்காலத்தில் செலவு செய்வதற்கான ஒப்பந்தங்களை நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது.
இந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் செலவு ஒப்புதல்களை உருவாக்குவதையோ அல்லது அரசுக்குத் தொண்டாகச் சேவைகளை (தன்னார்வ நிதி உட்பட) ஏற்றுக்கொள்வதையோ கடுமையாகத் தடை செய்கிறது.
எனவே, இந்த நன்கொடை சலசலப்பையும், சட்ட ரீதியான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.