கடந்த 2019ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல்காந்தி, “அனைத்து திருடர்களும் ஏன் 'மோடி' என்ற ஒரே குடும்பப் பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், பாஜக எம்எல்ஏவும், குஜராத் மாநில முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்தி ஒட்டுமொத்த 'மோடி' சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி, குஜராத் மாநிலம், சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி, சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து உள்ளது. அதோடு, இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக அப்போதே அவருக்கு ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உண்மையே தனது கடவுள் என்றும், அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்தே தனது நடவடிக்கைகள் இருக்கும்’ எனவும், மகாத்மா காந்தியை மேற்கோள் காட்டி பதிவிட்டு இருக்கிறார்.