கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் துரித நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்த இருக்கிறார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் இருக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்து இருக்கிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், மாநில அளவில் ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அக்கட்சி அறிவித்துள்ள அறிவிப்பில், ‘கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் அமமுக பங்கேற்கும்’ என அந்தக் கட்சி அறிவித்து உள்ளது.