

வைகாசி விசாகமான இன்று தமிழகம் முழுக்க உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக காலை 6 மணிக்கு திறக்கப்படும் கோவில்கள் கூட, முக்கிய விசேஷ தினம் என்பதால் இன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட ஆன்மீக சடங்குகளை பக்தர்கள் செய்து கொண்டிருந்தனர். அதி கலையிலிருந்து நீண்ட வரிசையில் முருகன் கோயில்களில் பக்தர்கள் காக்க நேரிட்டது.
இன்று மதியம் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடுமையான வெயிலும் , குடிநீர் வசதியும் இல்லாத காரணத்தினால் கூட்டத்தில் இருந்த ஒரு சில பக்தர்கள் மயக்கம் அடைந்ததாக தகவல்கள் பரவின. இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோயிலில் வரிசையில் காத்திருந்த பல பக்தர்கள் மயக்கம் அடைந்ததாக ஊடகங்களில் செய்தி பரவியது.
இந்த செய்திகள் சமூக வலைதளங்களில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் 87 பக்தர்கள், அடிப்படை வசதி இல்லாமல் மயக்கம் அடைந்ததாக பரவி வந்தது. இந்த செய்தியினால் தமிழகம் முழுக்க பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தை கண்டித்து அமுமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தமிழக அரசை மிகக் கடுமையாக தனது X பக்கத்தில் சாடியிருந்தார்.
"திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகம் நிகழ்வுக்கு முறையான முன்னேற்பாடுகள் செய்யாததன் விளைவாக கடுமையான வெயிலை எதிர்கொள்ள முடியாமல் குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் மயக்கமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நிமிடத்திற்கும் நிமிடம் ரீல்ஸ் போட்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கு, வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி விசாக நிகழ்வுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர தவறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இனி வரும் காலங்களில், இறை நம்பிக்கையுடன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய முன்னேற்பாடுகளை செய்திட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @tnhrcedept" என்று அவரது பதிவு இருந்தது.
தினகரனின் இந்த பதிவை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும் பக்தர்களுக்கு கோயில்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் மயக்கம் அடைந்தது தொடர்பாக அறநிலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அவர்களின் விளக்கத்தின்படி திருப்பரங்குன்றம் கோவிலில் 87 பக்தர்கள் மயக்கம் அடையவில்லை. மாறாக ஒரு பக்தர் மட்டுமே மயக்கும் அடைந்ததாகவும் , அவருக்கு ரத்தத்தில் திடீரென்று சர்க்கரை அளவு அதிகரித்த காரணத்தினால் மட்டுமே அவர் மயக்கம் அடைந்ததாகவும் கூறினார். அந்த பக்தரை உடனடியாக காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.