மகளிர் டென்னிஸ் சங்கம் நடத்திய மகளிருக்கான டென்னிஸ் போட்டியில் வென்று அடுத்த போட்டிக்கு முன்னேறிய ஒன்ஸ் ஜாபெர் ”எனக்கு மட்டும் மந்திர கரம் இருந்தால் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை காப்பாற்றுவேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
மெக்சிகோ நகரில் உள்ள கான்கன் என்ற இடத்தில் மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பாக டென்னிஸ் போட்டி அக்டோபர் 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி ஒவ்வொரு நிலையாக நடைபெற்று அதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள். அரையிறுதி போட்டிகளில் வெற்றிபெறும் இரு போட்டியாளர்களுக்கு இடையே நவம்பர் 5ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும்.
இந்நிலையில் இன்று நடந்த டென்னிஸ் போட்டியில் செக் வீராங்கனை வாண்ட்ரொசோவை எதிர்த்து வெற்றிபெற்ற டுனீசியா நாட்டு வீராங்கனை ஒன்ஸ் ஜாபெர் அடுத்த நிலைக்குச் சென்றுள்ளார்.
போட்டியில் வெற்றிபெற்ற ஒன்ஸ் ஜாபெரை போட்டியின் அனுபவத்தைப் பற்றி மகளிர் டென்னிஸ் சங்கம் சார்பாக பேட்டி எடுத்தனர். அப்போது பேசிய அவர்,”போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியே. ஆனால் கொஞ்ச நாட்களாக என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. அதற்குக் காரணம் பாலஸ்தீனத்தில் நடக்கும் கொடூரமான போரினால்தான். தினமும் எத்தனை குழந்தைகள் இறக்கிறார்கள்.
ஒவ்வொரு நிகழ்வும் மனதை நொறுக்குவது போல் உள்ளது. இதிலிருந்து தப்பிக்க சமூக வலைத்தளங்களிலிருந்து தள்ளி இருந்தாலும் கூட அந்த கொடுமைகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. சரியாக தூங்கக் கூட முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் நம்பிக்கை இல்லாதவள் போல் உணர்கிறேன். என்னால் அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று நொந்துபோகிறேன்.
எனக்கு மட்டும் ஒரு மந்திரக்கரம் இருந்தால் அந்த போரை நிறுத்தி பாலஸ்தீனுக்கு நிம்மதியை கொடுத்திருப்பேன். நான் இந்த போட்டிகளில் முன்னேறி இறுதிப் போட்டியிலும் வெற்றிபெற்றால் எனது வெற்றித் தொகையில் பாதிப் பணத்தை பாலஸ்தீனின் உதவிக்காகப் வழங்குவேன்” என்றார்.
இதைப் பற்றிப் பேசிய பின்னர் ஒரு சிறு குறிப்பும் சேர்த்துக் கூறினார். அதாவது,” நான் அதை அரசியல் அடிப்படையில் பேசவில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் தான் பேசுகிறேன்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்.