புல்லட் ரயில் பாதைக்காக இந்தியாவில் முதன் முதலாக மும்பையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு வரும் பிப்ரவரி 9-ம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படவுள்ளது.
புல்லட் ரயில் என்பது பிரதமர் மோடியின் கனவு திட்டம். மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 508 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகள் ஜப்பான் நாட்டிலிருந்து பெறப்பட்டுள்ளது.
இந்த புல்லட் ரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 21 கிலோமீட்டர் தொலைவுள்ள சுரங்கபாதையில் 7 கிலோமீட்டர் தொலைவுள்ள சுரங்கபாதை கடலுக்கு அடியில் அமைய உள்ளது. ‘தானே கிரிக்‘ என்ற இடத்தில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட இருக்கிறது. ‘பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ்‘ மற்றும் ‘சில்பட்டா‘ என்ற இரு நிறுத்தங்களுக்கு இடையே இந்த சுரங்கப்பாதை அமைய இருக்கிறது.
தற்போது இந்த 21 கிலோமீட்டருக்கு சுரங்கப் பாதை அமைப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி வரும் பிப்ரவரி 9ம் தேதி திறக்கப்படவுள்ளது.
ஏற்கெனவே இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பின்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.