6.1 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்... குலுங்கியது துருக்கி! துருக்கி அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவது ஏன்?
ஐரோப்பா கண்டத்தில் உள்ள துருக்கி நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது இதில் இஸ்தான்புல், சிந்திர்கி மற்றும் சுற்றுலாத் தலமான இஸ்மிர் ஆகிய நகரங்களும் பாதிக்கப்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் பாலிகேசேர் மாநிலத்தில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து நாசமாகின. மேற்குப் பகுதியில் உள்ள சிந்தீர்கியிலும் பல கட்டடங்கள் இடிந்துள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்; அதிகாரப்பூர்வமாக ஒருவர் உயிரிழந்தார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இரவில் இருந்தே தங்களது மீட்பு பணிகளை மீட்பு குழுவினர் தொடங்கினர். அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று தீவிரமாக கண்காணித்தனர். மீட்புக் குழுவின் தேடுதலில் , இடுபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 29 குடிமக்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியான சிந்திர்கியில் மீட்பு பணிகளை மேற்பார்வையிட்ட துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
"இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட 81 வயது முதிய பெண்மணி ஒருவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். மேலும் 29 பேர் காயமடைந்தனர், ஆனால் அவர்களின் நிலை மோசமானதாக இல்லை" என்றார்.
இந்த நிலநடுக்கத்தில் சிந்திர்கி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 16 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அதில் 4 கட்டடங்கள் மட்டுமே மக்களின் பயன்பாட்டில் இருந்துள்ளது . மீதி கட்டடங்கள் யாரும் இல்லாத பாழடைந்த கட்டடங்கள். இதில் இரண்டு மசூதிகளின் மினராக்களும் இடிந்து விழுந்துள்ளது. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள். பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த எந்த கட்டடங்களுக்கும், குறிப்பாக சிறிய விரிசல்கள் அல்லது உறுதியற்ற தன்மையைக் கொண்ட கட்டடங்களுக்குள் மக்கள் நுழைய வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.
துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான AFAD, 11 கி.மீ ஆழத்தில், 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறியது. இது பற்றி ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) நிலநடுக்கத்தின் அளவு 6.19 ரிக்டர் அளவிலும் 10 கிமீ ஆழத்தில் தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக சிறிய அளவில் நில அதிர்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அதில் ஒன்று 4.6 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதலுதவி செய்ய 319 பேர்களை அரசு அனுப்பி உள்ளது.
புவியியல் அமைப்பின்படி வடக்கு அனடோலியன் ஃபால்ட் போன்ற செயலில் உள்ள நில அதிர்வு மண்டலங்களின் உச்சியில் மேற்கு துருக்கி அமைந்துள்ளது. முக்கிய நில அதிர்வு மண்டலமான வடக்கு அனடோலியன் பிளவுப்பகுதி சக்திவாய்ந்த பூகம்பங்களுக்கு பெயர் பெற்றது.
மர்மாரா கடலுக்கு அருகிலுள்ள அதன் மேற்குப் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற அசைவுகள் தொடங்கி நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால் துருக்கி அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் துருக்கியின் தென்மேற்கு பகுதியில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தில் சுமார் 53,000 பேர் பலியாகினர். அப்போது இந்திய அரசு மீட்பு பணிகளில் பெரிய அளவில் துருக்கிக்கு உதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.