
கடந்த சில நாட்களுக்கு முன் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. சுமார் 6000க்கும் அதிகமானார் உயிரிழந்ததாக கூறப்படுபடுகிறது. 10,000க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. உலகமே சோகத்தில் மூழ்கும் அளவிற்கு இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகில் உள்ள மற்ற நாடுகளின் உதவியோடு மீட்பு பணிகள் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தொப்புள்கொடி கூட அறுக்கப்படாத குழந்தை ஒன்றை கண்டுபிடித்தனர்.
அந்த குழந்தையை அவர்கள் வெளியே எடுத்து அதன் பின்னர் மருத்துவரின் உதவியாளர் தொப்புள் கொடியை நீக்கியுள்ளனர். அந்த குழந்தையின் முதுகில் காயம் இருந்ததாகவும் முகம் முழுவதும் தூசி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த குழந்தை 35 டிகிரி செல்சியஸில் இருந்ததாகவும் இதனை அடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் காட்சி பார்ப்பவரைக் கண் கலங்க வைக்கும் அளவிற்கு உள்ளது. தற்போது துருக்கி மற்றும் சிரியாவில் மீட்புப் படையினர் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோக்கள் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது. இதில் சிரியா நாட்டில் அப்ரின் நகரில் அமைந்திருக்கும் மருத்துவமனை ஒன்று இடிந்து விட்டது. அங்கே நோயாளிகள் பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பதாக மீட்புக் குழுவினர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
உடனே சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புக் குழுவினர் நவீன கருவிகள் மூலம் உயிரோடு இருப்பவர்களைக் கண்டறிந்து முதலில் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இடர்ப்பாடுகளில் இருந்து கீழே இரத்தம் சொட்டுவதைக் கண்டனர்.
உடனே அங்கு இடிந்து கிடந்த பொருட்களை நீக்கி பார்த்ததில் இடர்ப்பாடுகளில் அடியில் இளம் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவரை அப்படியே மெதுவாக வெளியே எடுத்த போது அங்கே பச்சிளம் குழந்தை ஒன்று லேசான காயத்துடன் முனகிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளனர்.
இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் இறந்து போன தாய்க்கும், அந்த குழந்தைக்கும் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இணைந்தே இருந்ததுதான். இதனைக் கண்டு மீட்புக் குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
உடனே சுதாரித்துக் கொண்ட மீட்புப் படையினர் அந்த பச்சிளம் குழந்தையை கையில் எடுத்து அணைத்தபடி வெளியே மீட்டனர். தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இருந்த பச்சிளம் குழந்தையைத் தாயிடமிருந்து பிரித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தற்போது அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கி வருகிறது.
மிகப்பெரிய நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்த குழந்தை மட்டும் உயிர் பிழைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.