நெகிழ வைக்கும் காட்சி… இந்திய வீரரை முத்தமிடும் துருக்கி தாய்!

நெகிழ வைக்கும் காட்சி… இந்திய வீரரை முத்தமிடும் துருக்கி தாய்!

நிலநடுக்கத்தின் பேரழிவில் சிக்கி பாதிப்படைந்த மக்களை மீட்கப் போராடும் இந்திய ராணுவ வீரர் ஒருவரை நெகிழ்ச்சியுடன் முத்தமிடும் துருக்கித் தாய் ஒருவரின் புகைப்படம் நேற்று இந்திய வெளியுறவுத் துறையால் வெளியிடப்பட்டு உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் அன்பைப் பெற்றுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ‘ஆப்பரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் சிறப்புப் பாதுகாப்பு படை ஒன்றை அமைத்து இந்திய அரசு உதவி வருகிறது. அதில் 250 வீரர்கள் அடக்கம். போர் விமானங்கள் மூலமாக நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்து, மருத்துவர்கள் அடங்கிய மொபைல் மருத்துவமனைகளும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை இந்திய ராணுவத்தினர் மீட்கும் நெகிழ்ச்சியான தருணங்களை புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து இந்திய ராணுவம் வெளியிட்டு வருகிறது. அதில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரை மிகவும் நெகிழ்ச்சியுடன் முத்தமிட்டு தமது நன்றியை வெளிப்படுத்தும் துருக்கித் தாய் ஒருவரின் புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

துருக்கி நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி படுகாயமுற்றிருந்த 6 வயதுச் சிறுமியை இந்திய வீரர்கள் மீட்டு பத்திரமாக பாதுகாப்பு முகாமுக்கு அனுப்பினர். அவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியாவில் படு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தால் அந்நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் 33,000 கோடி என அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இரு நாடுகளிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் 21,000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என ரேட்டிங் நிறுவனமான ப்ரிஜ் தெரிவித்துள்ளது. இன்னும் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் பொருளாதார இழப்பு குறித்து உறுதியான தகவல்களைக் கணக்கிடுவது கடுமையான பணியாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

33,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பில் 8000 கோடி ரூபாய் காப்பீடு செய்யப்பட்ட இழப்பாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com