வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000: விஜய் கையில் எடுக்கும் அடுத்த அதிரடி திட்டம்..!

TVK ₹4,000 Youth Scheme 2026
TVK ₹4,000 Youth Scheme 2026
Updated on

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பாக பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். தமிழகத்தில் இளைஞர்கள் பலர் படித்துவிட்டு வேலையில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதனை கருத்து கொண்டு வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4000 வழங்கும் திட்டத்தை தவெக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அதாவது, படித்து முடித்த அவர்கள் வேலை தேடும் காலத்தில் வீட்டின் உதவியை எதிர்பார்க்காமல் அவர்களின் செலவை அவர்கள் பார்த்துக்கொள்ளும் நோக்கில் இத்திட்டத்தை தவெக அறிவித்தது.

ஜோசப் விஜய் கடந்த மே 10-ம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகிவிட்டது. முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டு அதனை நிறைவேற்றினார்.

இதையும் படியுங்கள்:
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000.. உடனே தேர்வுக்கு அப்ளை பண்ணுங்க!
TVK ₹4,000 Youth Scheme 2026

அடுத்து விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர்க்கடன் ரத்து பல்வேறு ஸ்லாப்கள் நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் ஆட்சி பொறுப்பேற்றவுடன் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி சிங்கப்பெண் அதிரடிப்படை வாக்குறுதியை ஜூன் 9-ம்தேதி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்.

தவெக தேர்தல் வாக்குறுதியாக மதிப்புமிக்க மகளிர் திட்டத்தின்கீழ் மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் அந்த தொகை கொடுக்கப்படவில்லை. திமுக ஆட்சி காலத்தில் வந்தது போல் ரூ.1000 மட்டுமே மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சீரமைக்கும் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் மரியவில்சன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இளைஞர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முனைப்பில் முதலமைச்சர் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, முதலமைச்சர் விஜய் வேலையில்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4000 வழங்கும் திட்டத்தை தவெக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. இத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு தற்போது ஆலோசித்து வருவதாக அமைச்சர் முகமது பர்வேஸ் கூறியுள்ளளார்.

TVK ₹4,000 Youth Scheme 2026
TVK ₹4,000 Youth Scheme 2026

சென்னை கிண்டியில் நடைபெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான (ITI) மாணவர் சேர்க்கை மற்றும் தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாநிலத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும், அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக விரிவான ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த திட்டத்திற்கான தகுதி வரம்புகள், விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த முழு விவரம் விரைவில் அரசாணையாக வெளியாகும் என அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு இளைஞர்கள் இடையே சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000-ம், டிப்ளமோ, 12-ம் வகுப்பு மற்றும் ITI முடித்த வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.2,500-ம் நிதியுதவியாக வழங்கப்படும்.

மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே மாதந்தோறும் வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் இன்னமும் தொடங்கப்படவில்லை. இது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ஒரு திட்டம் தான். ஏற்கனவே உள்ள திட்டத்தில் தகுதிகள் இந்தத் திட்டத்திலும் பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ் சொன்ன முதல்வர் விஜய்..! மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.1,000 வரவு வைப்பு..!
TVK ₹4,000 Youth Scheme 2026

இத்திட்டம், தமிழ்நாட்டில் வேலை தேடும் வேலையற்ற இளைஞர்களுக்குத் தற்காலிக நிதியுதவியை அளிப்பதோடு, அவர்கள் வேலை அல்லது திறன் மேம்பாட்டு வாய்ப்புகளைத் தேடும் காலத்தில் தங்கள் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கவும் உதவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com