விஜய்க்கு வந்த அடுத்த சிக்கல்..! – சிபிஐ-க்கு 'விஜய்' எழுதிய கடிதம்; சென்னையில் விசாரணை நடக்குமா?

vijay in delhi
vijay in delhisource:Dailythanthi
Updated on

கரூர் அருகே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிபிஐ விசாரணைக்காக, நேற்று மீண்டும் விஜய் டெல்லி சென்று திரும்பிய நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிய அவரது ரசிகர்களும், தொண்டர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதே சமயம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தவெக தனித்து நின்று போட்டியா அல்லது கூட்டணியில் இணைந்தா என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கட்சியின் தலைவரான விஜய். அரசல் புரசலாக NDA உடனான கூட்டணி பற்றிய தகவல்கள் கசிநதாலும் அவற்றை தற்போது வரை மறுத்து வருகிறது தவெக. இன்றும் கூட்டணி குறித்து இதுவரை யாருடனும் எந்தப் பேச்சு வார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார் தவெகவின் நிர்வாகிகளுள் ஒருவரான நிர்மல்குமார்.

கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகத் தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

2026 ஜனவரி முதல் சிபிஐ விஜயைத் டெல்லிக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இருமுறை விசாரணைக்கு ஆஜரான விஜய்க்கு, சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில், 3-வது கட்ட விசாரணைக்காக (3rd round enquiry) நேற்று (மார்ச் 15, 2026) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஆஜரான விஜயிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணை இத்துடன் நிறைவு பெற்றதா அல்லது தொடருமா என்பது குறித்து சிபிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே, நேரத்தை மாற்றவும், தமிழ்நாட்டிலேயே விசாரணை நடத்தவும் விஜய் விடுத்த கோரிக்கையை சிபிஐ ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தேர்தல் பணிகளுக்கு இடையில் அடிக்கடி டெல்லி செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு, மீண்டும் இந்த விசாரணையைச் சென்னையிலேயே நடத்தக் கோரி விஜய் சிபிஐ-க்குக் கடிதம் எழுதியுள்ளார்.

விஜய்க்கு எந்த மாதிரியான சூழல்களில் நெருக்கடி ஏற்படும் என்பது குறித்துச் சட்ட வல்லுநர்கள் சில கருத்துகளை முன்வைக்கின்றனர்:

  • நேரடி குற்றவியல் பொறுப்பு (Direct criminal liability) நிரூபிக்கப்படுதல்.

  • விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தவறுதல்.

  • ஆதாரங்களைச் சிதைக்கக்கூடும் (Evidence tampering) என்ற சந்தேகம் எழுதல்.

இந்த மூன்று காரணிகள் இருந்தால் மட்டுமே விஜய்க்கு சட்டரீதியான சிக்கல்கள் எழும் எனக் கூறப்படுகிறது.

விஜய்யின் வேண்டுகோளை ஏற்று சிபிஐ விசாரணை சென்னைக்கு மாற்றப்படுமா அல்லது மீண்டும் அவர் டெல்லி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com