#JUST IN : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்!

குதிரை பேரம் புகாரில் சிக்கிய செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.
Senthil balaji and Ashok got bail
senthil balaji get bailSenthil balaji: Deccan herald
Updated on

விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்க்க சரி செய்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு காவல்துறையினர் விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினர். தொடர்ச்சியாக அவர்கள் வெளியில் வராமல் இருப்பதால், காவல்துறை அவர்கள் வெளிநாடு தப்பி விடாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இதனிடையில் செந்தில் பாலாஜி முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் மனு அளித்திருந்தார். அது தொடர்பான விசாரணை இன்று மாலையிலிருந்து நடைபெற்று வருகிறது. புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை துறந்து தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தனிப் பெரும்பான்மை பெறாமல் தவெக, திமுகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஆட்சியை கலைப்பதற்காக , தவெகவை சேர்ந்த ஒரு சில எம்எல்ஏகளை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க சதி செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தவெக கட்சியை சேர்ந்தவருமான இளையராஜா , கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட சிலர் தன்னை தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறுவதாகவும் , தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, எதிராக வாக்களித்தால் 35 கோடி வரை லஞ்சம் தருவதாக பேசியதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

​ஆட்சிக் கவிப்பு சதி தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டு வந்த திருநாவுக்கரசு கொடுத்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கும் ஆட்சி கவிழ்ப்பில் சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டது. இவர்களுடன் ரமேஷ் , கார்த்திக் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

look out Notice issued to senthil Balaji
senthil balaji and brother

இந்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்து இருந்த முன் ஜாமின் மனு இன்று மாலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவின் மீதான விசாரணையை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்து வருகிறார்.

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் சார்பாக திமுகவின் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வாதாடி வருகிறார். அவரது வாதத்தில், குதிரை பேரம் தொடர்பாக எந்த ஒரு நேரடி ஆதாரமும் இல்லை , ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் யூகம் மட்டுமே. செந்தில் பாலாஜி பேசியதாகச் சொல்லப்படும் கால் (Call) விவரங்கள் அல்லது சி.டி.ஆர் (CDR) உள்ளிட்ட எந்தத் தொழில்நுட்ப ஆதாரங்களும் காவல்துறையிடம் இல்லை. எஃப்.ஐ.ஆரில் (FIR) செந்தில் பாலாஜியின் பெயரும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

விசாரணை முடிந்த பின்னர் நீதிபதி செந்தில் பாலாஜிக்கும் அவரது சகோதரருக்கும் நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கினார். அதன்படி தினமும் காலை மாலை என இரு வேளையும் காவல் நிலையத்தில் வந்து இருவரும் கையெழுத்திட வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com