

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய வார்த்தை குதிரை பேரம் ஆகும் . சட்டமன்ற தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காததால் , திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் வெளியேறி விஜய் முதல்வராக ஆதரவு கொடுத்தன. ஆதரவு கொடுத்த கூட்டணி கட்சிகளுக்கு , அமைச்சரவையில் தவெக இடம் ஒதுக்கியதால் பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானவர்கள் தவெகவில் சேர அதிக ஆர்வம் காட்டினார்.
அதிமுகவிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் , தங்களது பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதிலிருந்து குதிரை பேரம் என்ற சொல்லினை எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வந்தன. மேலும் சோபா மாடல் அரசு என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். தற்போது இதில் திருப்பமாக குறிப்பிட்ட சிலர், தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரும் அவரது தம்பி அசோக் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பாக அவர்கள் இருவரையும் விசாரிக்க காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் அவர்கள் வெளிநாடு தப்பி விடாமல் இருக்க லுக் அவுட் நோட்டிஸும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மதியம் குதிரை பேரம் தொடர்பாக ஶ்ரீ வைகுண்டம் தொகுதி, தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து குதிரை பேரம் தொடர்பான ஆடியோ ஆதாரங்களை அளித்தார். அவர் பேசுகையில் "நீங்கள் தவெகவில் இருந்தால் உங்களை அழித்து விடுவோம். உங்களுக்கு எத்தனை கோடி பணம் வேண்டும்? நிறைய நபர்கள் என்னிடம் நேரடியாக ,30 கோடி தருகிறேன் 50 கோடி தருகிறேன் 100 கோடி தருகிறேன் அதற்கும் மேலும் வேண்டுமானாலும் தருகிறோம்" என்றார்கள்.
தமிழகத்தில் உள்ள 100 கோடீஸ்வரர்களில் 60 கோடீஸ்வரர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நீங்கள் அடிமட்டத்திலிருந்து வந்தவர் அதனால், நாங்கள் சொல்வதைக் கேட்டு திமுகவிற்கு வந்து விடுங்கள். நானும் ஏழ்மை நிலையில் இருந்து வந்ததால் என்னை இந்த பாடு படுத்துகிறார்கள்.
நெல்லையை சேர்ந்த ஒரு திரையரங்க உரிமையாளர் என்னிடம் பேரம் பேசினார். அது மட்டும் அல்லாமல் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் தொடர்புடைய நான்கு பேர்கள் என்னிடம் பேரம் பேசினார்கள். அதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. என்னிடம் மட்டுமல்ல , என்னுடன் இருப்பவர்களிடமும் அவர்கள் பேசினார்கள். "ஒன்று இந்த பக்கம் வந்து விடு, இல்லாவிட்டால் உன்னை மொத்தமாக அழித்து விடுவோம்" என்று மிரட்டினார்கள்.
அனிதா ராதாகிருஷ்ணன் குதிரை பேரம் என்று வாய்க்கு வந்ததை பேசினார். ஆனால், என்னிடம் குதிரை பேரம் பேசியதற்கு ஆதாரம் உள்ளது. சிலர் நேரடியாகவே எனது எம்எல்ஏ விடுதிக்கு வந்து " நீ அடிமட்டத்தில் இருந்து வந்தவன். நீயோ வண்டியில் போறவன் , உன்னை லாரியை வைத்து அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?" என்று மிரட்டினார்கள்.
அதுபோலவே 25 நாட்களுக்கு முன்னர் , நான் வாகனத்தில் செல்லும் பொழுது எதிரே ஒரு லாரி வேகமாக மோதுவதை போல் வந்தது , நான் வலது பக்கம் ஏறி அதிலிருந்து தப்பித்தேன். ஆனாலும் எனது வாகனம் சேதம் அடைந்து 25 நாட்களாகவே சரி செய்வதற்காக சர்வீசில் உள்ளது , என்று கூறினார். குதிரை பேரத்தில் ஈடுபட்டது மற்றும் சட்டமன்ற உறுப்பினரை மிரட்டியது போன்ற செய்திகள் தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.