

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடத்திற்கு மாற்றாக பரபரப்பான சூழலில் முதலமைச்சரானார் தவெக தலைவர் விஜய்.இந்நிலையில் விஜய் கட்சியின் எம் ஏ க்களின் கல்வித்தகுதி குறித்து தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது, 108 தவெக எம்.ஏ-க்களில் 6 பேர் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள்,22 பேர் முதுகலை பட்டதாரிகள்,5 பேர் ஐஐடியில் படித்தவர்கள், 8 பேர் எம்பிபிஎஸ் பயின்ற மருத்துவர்கள், 40 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் என ஒரு கணக்கெடுப்பு சோஷியல் மீடியாக்களில் உலா வருகிறது.இது உண்மையான தகவலா என்பது குறித்த சர்ச்சைகள் மற்றும் விவாதங்களும் நடந்து வருகிறது.
இதில் சிலர் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் கல்வித்தகுதியை வைத்து “இவர்கள் நிர்வாக அனுபவமில்லாதவர்கள், வெறும் படித்தவர்கள் மட்டும்” என்று விமர்சிப்பதாலும், மறுபக்கம் ஆதரவாளர்கள் “படித்தவர்கள் அரசியலுக்கு வருவது நல்ல மாற்றம்” என்று ஆதரிப்பதாலும் விவாதங்கள் தொடர்கிறது.
உண்மையில் "உயர் கல்வி பெற்றவர்கள் வந்தால் நிர்வாகத் திறன், கொள்கை புரிதல், திட்டமிடல் நல்லதாக இருக்கும்” என்பது வல்லுநர்கள் கருத்து.கல்வி மட்டுமே அரசியலில் வெற்றிக்கு உத்திரவாதம் இல்லை..ஆனால் தகுதியானவர்கள் அதிகாரத்தில் இருப்பது நிச்சயமாக அதிக தொழில்முறை மற்றும் மக்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் அரசுக்கு நம்பிக்கை அளிக்கிறது என்கின்றனர்.
மறுபக்கம் இதை விமர்சிப்பவர்கள் “படிப்பு மட்டும் போதாது; தரைமட்ட அரசியல் அனுபவம், மக்கள் பிரச்சினை புரிதல் முக்கியம்” என்பார்கள்.உண்மையில், ஒரு MLA நல்லவரா இல்லையா என்பதை கல்வித்தகுதி மட்டும் தீர்மானிக்காது. மக்கள் தொடர்பு,தொகுதி பணி,நிர்வாகத் திறன், நேர்மை, சட்டமன்ற செயல்பாடு. ஆகியவைகள்தான் முக்கியத் தகுதிகளாகிறது.
மேலும் இந்த எண்ணிக்கைகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டாலும், இதுவரை தமிழக வெற்றிக் கழகம் அல்லது தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தொகுப்பு பட்டியல் எதுவும் முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக ஊடகத்திற்கு விளக்கப்படம் அல்லது ஆதரவாளர் கணக்கெடுப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
விஜய் வேட்பாளர் தேர்வில் நிச்சயமாக படித்தவர்கள் வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்ததை எண்ணும் போது 80 சதவீதம் படித்தவர்கள் தவெக வேட்பாளராக களத்தில் இறங்கி இருக்கலாம் என்பதால் இந்த படித்தவர்கள் லிஸ்ட் உண்மையானதாகவும் அமையக்கூடும்.
படித்தவர்கள் வேண்டும் என்று தேர்வு செய்த முதல்வர் விஜயே பட்டம் முடிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலாவில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்க சேர்ந்த பின் திரை வாய்ப்புகள் அதிகரித்ததால் கல்வியை பாதியில் நிறுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அரசியல் விவாதங்களில் “பட்டம் முடிக்கவில்லை” என்ற விமர்சனமும் “அனுபவமும் மக்கள் ஆதரவும் முக்கியம்” என்று ஆதரவும் விஜய் மீது வைக்கப்படுகிறது.
விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும் மெத்தப் படித்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனையுடன் வழிநடத்தினால் நிச்சயம் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.