

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் ஒருவர் லஞ்சம் வாங்கியது, சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை மற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் பெரிய அளவில் , கிளப்பும் முன்னரே தவெக கட்சியே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக பேசி வரும் நிலையில், அந்த கட்சி பிரமுகரே லஞ்சம் வாங்கியது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளரும், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீராசாமி என்பவர் லஞ்சம் வாங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலை தளங்களில் பதவி வருகின்றன. தமிழக அரசு சார்பில் மாம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த பகுதியில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டு, நவீன் என்னும் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் சாலைப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் , அதற்கான நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்கப்படவில்லை . அந்த தொகையை விடுவிக்க , ஊராட்சி தலைவரானா வீராசாமி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. சிமெண்ட் சாலை ஒப்பந்ததாரராக நவீன் அவரிடம் 1.30 லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாக கொடுக்கும் பொழுது, தனது மொபைல் போன் மூலம் வீடியோ மறைமுகமாக எடுத்துள்ளார்.
மேலும் வீராசாமிக்கு G Pay மூலமாகவும் பணத்தினை அனுப்பி அதை ஆவணமாக பதிவு செய்து கொண்டார். இந்த ஆதாரங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வீடியோ காட்டுத்தீ போன்று வேகமாக சமூக வலைதளங்களை பரவி வந்துள்ளது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகிரப்பட்ட வீடியோவில். ஏற்கனவே வீராசாமி 1 லட்ச ரூபாய் கைமாற்றுவது குறித்தும் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏராளமானவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் , அந்த கட்சி பிரமுகர்களுக்கும் கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. வீராசாமி லஞ்சம் வாங்கிய காட்சிகள் அனைத்தும் மிகவும் பிரபலமான நிலையில் , தமிழக வெற்றி கழகம் அவர் மீது தீவிரமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழகத்தை ஊழலிலிருந்து காப்பாற்றுவதாக கூறிய கட்சி பிரமுகரே லஞ்சம் வாங்கியது, அந்த கட்சிக்கு பொதுவெளியில் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஏற்படும் பெயர் இழப்பை விரும்பாத தவெக உடனடியாக வீராசாமியை , அவர் வைத்துள்ள அனைத்து பதவியில் இருந்தும் விடுவித்துள்ளது. மேலும் அவர் தவெக அடிப்படைக் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தும் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார். தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் தினகரன், வீராசாமியை கட்சியில் இருந்து நீக்கி அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.
தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேவையற்ற களங்கத்தை விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் வீரா (எ) வீராசாமி, இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கிய கட்சி நிர்வாகியை , கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை தவெக தொண்டர்கள் பாராட்டி வருகின்றனர்.