

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்திப்பதற்காக மீண்டும் செல்கிறார் தவெக தலைவர் விஜய்.
ஆளுநரை இன்னும் சற்று நேரத்தில் சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய். ஆட்சி அமைக்க அனுமதி கோரி நேற்று சந்தித்த நிலையில் இன்று மீண்டும் சந்திப்பு நிகழ இருக்கிறது.
நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் விஜய். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், செங்கோட்டையன், என். ஆனந்த், அருண்ராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜயை நேரில் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கினார்கள்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தவெகவின் 108 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏக்களின் பட்டியலை வழங்கினார். ஆனால் அதைப் பெற்றுக் கொண்டு ஆளுநர் 118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலைக் கொண்டு வந்தால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில் ஆளுநர் அர்லேகரை சந்திக்க தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீண்டும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு அவரை சந்திக்க புறப்பட்டு சென்றுள்ளார்.
ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மீண்டும் இன்று ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரை சந்திக்கிறார் . தவெக தலைவர் விஜய் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் என்பது அரசியலில் கவனிக்கப்பட தக்க விஷயமாக உள்ளது. தனிப் பெரும்பான்மை நிரூபிக்க இரண்டு வார காலம் அவகாசம் இருக்கும் நிலையில் ஆட்சி அமைக்க தவெக கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை ஆளுநரிடமா வலியுறுத்துவார் என்பது தெரிகிறது.
ஆளுநர் மாளிகைக்குள் விஜய் காருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் பின்தொடர்ந்த அதன் அர்ஜூனாவின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.