

சட்டசபை தேர்தலை சந்திக்க தவெக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு இரண்டு தினங்கள் முன்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பந்தக்கால் நடப்பட்டு தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்றன. நேற்று 23ம் தேதி திங்கட்கிழமை அகரம் சேரியில் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டதாக வேலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வேலூரில் பிப்ரவரி 23, 2026 அன்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், 4,900 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் 10,000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உயர் நீதிமன்ற விதிமுறைகள் மற்றும் அரசாணை எண். 05ஐ மீறியதாக வேலூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அனுமதி வழங்குவதில் தாமதம் என தவெகவினர் கூறியது உண்மைக்கு புறம்பானது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விஜயின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி ஒன்றரை மாதங்களாக போராடியதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் அனுமதி வழங்க ஒன்றரை மாதங்களாக ஆகியதாகவும், நிகழ்ச்சிக்கு 20 மணி நேரத்திற்கு முன்பு தான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தவெகவினர் கூறியது முற்றிலும் பொய் என வேலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 22.02.2026 அன்று, தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, வேலூர் மாவட்டத்தின் தவெக கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சியின் தலைவர் நிகழ்ச்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்புதான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மீண்டும், 06.02.2026-ம் தேதி அன்று தவெக நிர்வாகம் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்தவுள்ளதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என மனு அளித்தார். இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்ட நிலையில் 18.02.2026 அன்று அளித்த மனுவில் "வேலூர் மாவட்டத்தில் 23.02.2026 அன்று எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்திருந்தோம், அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25,000 கலந்துகொள்ள அனுமதி கேட்டிருந்தோம்". "மேலும் இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4900 பேர் கலந்துகொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது". இதுதொடர்பாக காவல் துறையினரால் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதிலுரையினை தமிழக வெற்றிக் கழகத்தினர் 20.02.2026-ம் தேதி சமர்பித்தனர்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்திருந்த போதிலும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்துமிடங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.
தவெக கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாகதான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மேலும், தவெக கட்சியினர் அளித்த மனுவில் கோரப்பட்டபடி 4900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது.
ஆனால், 23.2.2026 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிட்டதை விட இரு மடங்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடியதால், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. எனினும் அதிகப்படியான கூட்டத்தினால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வண்ணம் காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது என்று காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகிகள் தரப்பில், கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காகவே இடம் மாற்றப்பட்டது என்றும், இந்த கூட்டம் உள் அரங்கமாகவே நடத்த திட்டமிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.