விமானிகள் அறைக்குள் பெண் நண்பரை அனுமதித்த இரண்டு ஏர் இந்தியா பைலட்டுகள் சஸ்பெண்ட்!

விமானிகள் அறைக்குள் பெண் நண்பரை அனுமதித்த இரண்டு ஏர் இந்தியா பைலட்டுகள் சஸ்பெண்ட்!
Published on

விமானிகள் அறைக்குள் பெண் நண்பரை அனுமதித்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா விமானிகள் (பைலட்டுகள்) இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விமானிகள் அறைக்குள்ள யாரை அனுமதிப்பது என்ற விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கடந்த மாதம் சிவில் விமான போக்குவரத்துறை இயக்ககம் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்திருந்தது. அதற்குள் மீண்டும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வாரம் தில்லியிலிருந்து லே செல்லும் (ஏர் இந்தியா 445) விமானத்தில் அனுமதியின்றி விமானிகள் அறைக்குள் பெண்ணை அனுமதித்ததான புகார் தொடர்பாக ஏர் இந்தியா இரு விமானிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. விமானக் குழுவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானிகள் அறைக்குள் பெண்ணை அனுமதித்ததற்காக அந்த இரு விமானிகளும் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தங்களது கவனத்துக்கு வந்துள்ளதாகவும் விதிமுறைகள்படி அவ்விருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

தில்லி- லே விமான வழித்தடம் மிகவும் ஆபத்தான, பதற்றமான வழித்தடமாக கருதப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு விதிகளை மீறுவது சட்டப்படி கடுமையான தண்டனைக்குரியதாகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி துபை-தில்லி ஏர் இந்தியா விமானத்தில் அதன் விமானி ஒரு பெண் நண்பரை விமானிகள் அறைக்குள் அனுமதித்ததாக விமானக் குழுவைச் சேர்ந்த ஒருவர் சிவில் விமான போக்குவரத்துத் துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய விமான போக்குவரத்துத்துறை, அந்த விமானியின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்திருந்தது. மேலும் விதிமுறைகள் சரிவர அமல்படுத்தாத ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com