மாலத்தீவு அதிபருக்கு பில்லி சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் கைது!

Mohamed muizzu
Mohamed muizzu

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவிற்கு மண்டை ஓடுகள் பயன்படுத்தி பில்லி சூனியம் வைத்ததாக அந்த நாட்டின் இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவு அதிபராக முகமது முய்ஸு பதவியேற்றதிலிருந்து பல விவகாரங்களினால், உலக மக்கள் மனதில் பதிந்துவிட்டார். குறிப்பாக இந்திய மக்கள் மனதில் என்று சொல்லலாம். இவர் பதவியேற்ற காலத்திலிருந்து சீனாவிற்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். இதுவே பேசுபொருளாக இருந்து வரும் சமயத்தில், தற்போது வேறொரு விவகாரத்திலும் அதிகம் பேசப்படுகிறார்.

முய்ஸுவுக்கு சூனியம் வைத்ததாக அந்நாட்டு அமைச்சர் பாத்திமத் ஷம்னாஸை மற்றும் அமைச்சர் ஆடம் ரமீஸ் என 2 அமைச்சர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாத்திமத் ஷம்னாஸ் மாலத்தீவின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சராக இருந்து வந்தார். தற்போது இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மாலத்தீவில் இந்த பில்லி சூனியம் சம்பவம் அவ்வப்போது நிகழ்வதாக தெரிகிறது. ஏனெனில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மனதூவி பகுதியில் 62 வயது மூதாட்டி பக்கத்து வீட்டுக்காரரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் மூதாட்டி பில்லி சூனியம் வைத்ததாகவும், எனவேதான் குத்தினேன் என்றும் பக்கத்து வீட்டுக்காரர் கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த சம்பவத்திலும் மூதாட்டி ஈடுபடவில்லை என போலீசார் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு முன்னர், அந்த ஆண்டு ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டம் ஆளும் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியது. எனவே எதிர்க்கட்சி தலைவர்களை தேடி தேடி கைது செய்தனர். அவர்களது அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர். இப்படி ரெய்டு நடத்தியபோது எதிர்க்கட்சியினர் சிலர் சபிக்கப்பட்ட சேவலை போலீஸ்காரர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் போலீசார் அப்படியே பின்வாங்கினர்.

இதையும் படியுங்கள்:
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோக்கள்… ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!
Mohamed muizzu

இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இது தொடர்பாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

பில்லிசூனியம், ஏவல் உள்ளிட்டவற்றின் மூலம் எதிர்தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் நம்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தண்டனை எதுவும் கிடையாது. ஆனால், முஸ்லீம் சட்டத்தின் கீழ் ஆறு மாதக் காலம் சிறை தண்டனை மட்டுமே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com