தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்துள்ள சி.பள்ளிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் கடந்த இரண்டு நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தத் திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்றிரவு டாட்டா ஏசி மினி வேன் ஒன்றில் சாமி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது. அப்போது சாமி ஊர்வலத்தில் பட்டாசுகளும் வானவேடிக்கைகளும் வெடிக்கப்பட்டு வந்தன.
சாமியை ஊர்வலமாகக் கொண்டு சென்ற வேனில் பட்டாசுகள் உள்ளிட்ட வான வேடிக்கை வெடி மருந்துகள் அதிகமாக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. சாமி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின் கம்பத்தில் பட்டு அது மீண்டும் சாமி வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டையின் மீது விழந்ததில் மூட்டையில் இருந்த வெடி மருந்துகளோடு பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின.
சாமி ஊர்வலத்தில் சாலையோரம் நின்றிருந்த ஆகாஷ் என்ற சிறுவன் இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சாமி ஊர்வல வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் ராகவேந்திரன் மற்றும் ஆதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் வேன் ஓட்டுநர் ராகவேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வெடி விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.