

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து புதிய முதலமைச்சராக திரு.ஜோசப் விஜய் அவர்கள், இன்று காலை நெரு உள் விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ப்பை தொடர்ந்து அவருக்கு இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தனி செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை இன்று தமிழக தலைமை செயலாளர் எம்.சாய்குமார் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் விஜயின் பணிகளை வேகமாகவும், சீராகவும் கவனித்துக் கொள்வதற்காக தனி செயலாளராக ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் , கூடுதல் தனி செயலாளராக மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியும் நியமனம் செய்வதற்காக இரண்டு தற்காலிக பதவிகளை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.
முதல்வரின் நேரடி செயலாளராக டாக்டர். பி. செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாக்டர் பி செந்தில்குமார் முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்படும் முன்னர் தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பை வகித்து வந்தார். தற்போது இந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு , முதல்வரின் நேரடி முதன்மைச் செயலாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
புதிதாக பதவி ஏற்றுள்ள தமிழக அரசு , சுகாதாரத் துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்காக , சுகாதார துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த செந்தில்குமாரை நியமனம் செய்துள்ளது. மேலும் தமிழகத்தின் சுகாதாரத் துறையை மேம்படுத்தவும் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
முதல்வரின் கூடுதல் தனிச் செயலாளராக திருமதி ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த பணியில் நியமனம் செய்யப்படும் முன் , அவர் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். தற்போது இவரும் இந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு முதல்வரின் கூடுதல் தனி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பணி நியமனம் மூலம் தமிழக அரசின் பெண் உயர் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக இருக்கிறது.
திருமதி.ஜி .லட்சுமி பிரியா அவர்களின் நியமனம் , தமிழக முதல்வர் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் , ஆதிதிராவிடர் மற்றும் மற்ற சமூகங்களை சேர்ந்த அடிதட்டு மக்களின் மேம்பாட்டிற்காக அரசின் திட்டங்களை விரைவுப்படுத்துவதற்காகவும் புதிய பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளார். மேலும் அனுபவம் வாய்ந்த இரண்டு செயலாளர்களும் முதல்வரின் முக்கியமான பணிகளை விரைந்து முடிக்க செயல்படுவார்கள்.
முதல்வரின் தனிச் செயலாளர் பதவிகள் ஐஏஎஸ் (Cadre) விதிகள் 1964 விதி 4(2)-ன் படி உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முதன்மை செயலாளர் பதவி , தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான அந்தஸ்து பொறுப்புகளையும் கொண்டுள்ளது. முதல்வரின் கூடுதல் தனிச் செயலாளரின் பதவி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பதவிக்கு இணையான அந்தஸ்து அதிகாரமும் கொண்டது.
புதிய தனி செயலாளர்களின் நியமனங்கள் முதல்வர் விஜயின் அதிரடி திட்டங்களுக்கு, விரைந்து செயலாற்று வகையில் நிர்வகிக்கப்பட உள்ளது. மேலும் மக்கள் சார்ந்த பணிகளுக்கு அதிக முன்னுரிமை தரும் வகையில் அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.