வேலூர் மாவட்டம் குடியாத்தம் 'குடி'மக்கள் கவலை! இரண்டு டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடல்! வேலூர் கலெக்டர் அதிரடி!

Tasmac
Tasmac
Published on

ஒரு வார காலமாக குடியாத்தம் நகரில் டாஸ்மாக் தொடர்பாக பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த வாரம் குடியாத்தம் நகரின் இரு இடங்களில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கச் சென்ற அதிகாரிகளுக்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை பின்வாங்க வைத்தனர். ஒரு இடத்தில் சப் கலெக்டர் சுபலட்சுமி இந்த பகுதிக்கு கடை வராது என வாக்குறுதியும் தந்து விட்டு வந்துள்ளார்.

இப்படி இருக்கையில் வேலூர் மாவட்ட கலெக்டர் இரு டாஸ்மாக் கடைகளை மூடும்படி கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, கவுண்டன்ய ஆற்றின் மேலே காமராஜர் மேம்பாலம் அமைந்துள்ளது.

கவுண்டன் ஆற்றின் கரையோரமாக 37 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கும் பணி இப்போது நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் டாஸ்மாக் எலைட் ஷாப் ஒன்றும் சாதாரண டாஸ்மாக் கடையும் இயங்கி வருகின்றன.

கடந்த வாரம் வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி அந்த வழியாக பேரணாம்பட்டு நோக்கி சென்றுள்ளார். அப்போது ஒரு பாதையில் நூற்றுக்கும் அதிகமான 'குடி'மக்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ந்து போன கலெக்டர், 'அங்கு என்ன பிரச்னை?' என தன் காரை நிறுத்தி உதவியாளரை விசாரித்து வரச் சொல்லி உள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற உதவியாளர் திரும்பி வந்து, 'அம்மா அவர்கள் அனைவரும் ரோட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டுள்ளனர். இது எப்போதும் நடப்பது தான் என அங்கிருந்தவர்கள் கூறினார்கள்' என்றுள்ளார்.

இதைக் கேட்ட கலெக்டர், 'மதியம் 12:00 மணிக்கே இவ்வளவு பேர் இங்கு அமர்ந்திருந்தால் அங்கு சாலை பணிகள் எப்படி நடக்கும்? சாலை வசதி பின்பு எப்படி கிடைக்கும்?' என புலம்பியபடி அந்த இரு கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் உத்தரவுபடி அந்த இரு கடைகளும் மூடப்பட்டன.

இப்போது அந்த சாலையில் யாரும் மது அருந்த அமர்வதில்லை. இதைப் பார்த்து கவலை அடைந்த டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் 'நம் துறைக்கு என்னதான் ஆச்சு? திருஷ்டியா? சுத்தி போட சொல்லணும்' என்றபடி தங்களுக்குள் பேசி வருகின்றனர்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட எஸ்பி ஆக அன்பு இருந்தபோது அவர் ராணிப்பேட்டை பகுதியில் இரவு 7 மணிக்கு தன் பாதுகாவலர்களுடன் ரோந்து சென்றார். அப்போது இதே போல ஒரு இடத்தில் 'குடி'மகன்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். மேலும் 6 வழி சாலையில் நடுவே சாலை பிரிப்பான் மேல் அமர்ந்து பலர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

இதையும் படியுங்கள்:
டாஸ்மாக் கடை வேண்டாம் என்று போராடிய குடியாத்தம் மக்கள்! வேறு வழியின்றி உத்தரவாதம் அளித்த சப் கலெக்டர்!
Tasmac

இதை பார்த்த எஸ்பி அன்பு அவர்களை அங்கிருந்து துரத்தி அடித்தார். அடி வாங்கிய சில குடிகாரர்கள் தங்களை விரட்டிய போலீசாரை பார்த்து, 'எங்க ஊர் போலீஸ் எல்லாம் ரொம்ப நல்லவங்க... வாயிலே சொல்லுவாங்க... நாங்க அமைதியா கேட்டுக்குவோம்... நீங்க எந்த ஊர் போலீஸ்? இப்படி பண்றீங்க?' என புலம்பியபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட 'குடி'மக்களும், டாஸ்மாக் நிர்வாகமும் பின்னிப் பிணைந்து இருப்பது இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ வாய்ப்பாக அமைந்துள்ளது.  இதனால் பாதிக்கப்படுவது டாஸ்மாக் தவிர்த்த அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மட்டுமே... பொதுமக்களும்தான் என்று சொல்லவும் வேண்டுமா?                

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com