மணல் புயலால் 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில்... ஈரானில் சோகம்!

மணல் புயலால் 2 ஆயிரம் பேர் மருத்துவமனையில்... ஈரானில் சோகம்!
மாதிரிபடம்
Published on

ரான் நாட்டில் தொடர்ந்துவரும் மணல் புயலால் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஈரான் முதலிய மத்திய கிழக்கு நாடுகளில் அவ்வப்போது மணல் புயலோ புழுதிப் புயலோ ஏற்படுவது உண்டு. ஆனாலும் அண்மைய ஆண்டுகளாக இந்த வட்டாரத்தில் அடிக்கடி மணல்- புழுதிப் புயல்கள் அதிகரித்து வருகின்றன. வழக்கமாக, ஆண்டுதோறும் மே மாதக் கடைசிவாக்கில் மணல் புயலின் தாக்கம் தொடங்கும். இந்த ஆண்டில் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று தொடங்கி, இரு வாரங்களாக மணல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிஸ்தான், பலுசிஸ்தான் மாநிலங்களில் பாதிப்பின் அளவு கடுமையாக இருக்கிறது. கடந்த ஐந்து நாள்களில் மட்டும் மணல் புயலால் பாதிக்கப்பட்ட 800-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இதயத்திலும் கண்களிலும் பிரச்னை உண்டாகியுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று ஏற்பட்ட மணல் புயலால், ஆயிரத்து ஐம்பது பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சபோல், சகாக், ஹமௌன், ஹிர்மண்ட், நிம்ரௌஸ் ஆகிய நகரங்களிலேயே அதிக அளவு பாதிப்பு காணப்பட்டது. செப்டம்பர் கடைசிவரை மணல் புயல் தொடர வாய்ப்பு உள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், 2,024 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வட்டாரத்தில் காடுகள் அழிப்பு, நிலையில்லாத விவசாயச் செயல்பாடுகள், நகரமயமாக்கம், அணைகளைக் கட்டுதல், தண்ணீரை வரன்முறையின்றி பயன்படுத்துவது போன்ற காரணங்களால், மணல் புயல் அதிகரித்து வருகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். ஈரான் நாட்டின் சுற்றுச்சூழல் துறை முன்னாள் துணைத்தலைவர் கவே மதானி, மணல்- புழுதிப் புயல் அபாயத்துக்கு உரிய அளவுக்கு கவனம் செலுத்தப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம், நாடுகள், தலைமுறைகளைக் கடந்த ஒன்று என்பதைக் கணக்கிலெடுத்து உரிய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com