உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார். இவர் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வரை பொறுப்பு வகிப்பார் என்பது குறிப்பிடத் தக்கது.
புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க தடை விதிக்க கோரி முர்சலின் அசிஜித் சேக் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த சில உத்தரவுகள் முரண்பாடுகளை கொண்டுள்ளதாகவும், எனவே, அவர் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, அடிப்படை ஆதாரமின்றி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.