ரஷ்யாவுக்கு எதிராகப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு சிறப்பு உளவு டிரோன்கள் உட்பட 40 கோடி டாலர் மதிப்பிலான தளவாட உதவிகளைச் செய் முன்வந்துள்ளது அமெரிக்க அரசு.
ரஷ்யப் போர் தொடங்கிய பின்னர், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் 43ஆவது இராணுவ படை உதவி இதுவாகும். பிளாக் ஹார்னட் டிரோன்கள் எனப்படும் இந்த வகை சிறப்பு உளவு டிரோன்கள், நார்வே நாட்டில் தயாரிக்கப்பட்டவை. உக்ரைனில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹார்னட் உளவு டிரோன்களை பிரிட்டனும் நார்வேயும் சேர்ந்து நன்கொடையாக வழங்கியிருந்தன. இவற்றுடன் 9.3 கோடி டாலர் மதிப்பிலான ஆளில்லா விமானங்களையும் ஹார்னட் தயாரிப்பு நிறுவனமான டெலிடைன் தயாரித்து வழங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பேட்ரியாட் வகை ஏவுகணை அமைப்புகள், தரையிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் நாஸ்ம்ஸ் ஏவுகணைகள், ஏவுகணை மறிப்பு அமைப்புகள், ஹிமார்ஸ் எனப்படும் அதிக தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைச் செலுத்திகள், தாக்குதல் ஆட்களைச் சுமந்துசெல்லும் ஊர்திகள் என பலவகைப்பட்ட ஏவுகணைகள், உந்துகலன்களையும் அமெரிக்கா இந்த முறை உக்ரைனுக்கு வழங்குகிறது.
அதிபரின் சிறப்பு அதிகாரத்தின்படியான நிதியுதவியின் கீழ் இந்த இராணுவ உதவி வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு அதிகாரத்தின்படி, இதற்கான அனுமதியை அரசு நாடாளுமன்றத்தில் பெற வேண்டிய அவசியம் இல்லை. அவசர காலங்களில் இப்படி செய்வதற்கு அதிபருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள படைபல உதவியின் மொத்த மதிப்பு 4300 கோடி டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான போரை ரஷ்யா எப்போதும் நிறுத்தமுடியும்; அப்படி நிறுத்தாதவரை அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் உக்ரைனுடன் சேர்ந்து நிற்போம் என்று இந்த உதவி வழங்கலை முன்னிட்டுப் பேசிய, அமெரிக்காவின் அரசுச் செயலர் அண்டனி பிளிங்கன் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த செய்கையானது நெறிமுறைகளுக்கு அப்பாலானவை மட்டுமல்ல, பொது அறிவுக்கும் பொருத்தமில்லாதது என்று அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் அனட்டாலி அண்டனவ் தங்கள் தூதரகத்தின் டெலிகிராம் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பிரிட்டன் அரசுத் தரப்போ, கருங்கடல் வழியான இராணுவத்தினர் அல்லாத கப்பல்கள் மீதும் ரஷ்யா தாக்குதல் நடத்தும் எனத் தெரிகிறது என்றும் உக்ரைனில் இருந்து உணவு தானியங்களை ரயில், சாலை வழியாக எடுத்துச்செல்ல ஐரோப்பிய ஒன்றியம் உதவும் என்றும் கூறியுள்ளது.