மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் மாஹிம் பகுதியில் மொகலாய பேரரசர் அவுரங்கசீப் படத்துடன், உத்தவ் தாக்கரே மற்றும் வான்சித் பகுஜன் அகாதி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை யார் வைத்தார்கள் என்பது தெரியவில்லை. அவை உடனடியாக அகற்றப்பட்டுவிட்டன. இது குறித்து எந்த புகாரும் வரவில்லை. எனினும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று மும்பை போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே சிவசேனை கட்சித் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான தீபக் கேசர்கர் கூறுகையில், உத்தவ் தாக்கரேவுக்கு திடீரென அவுரங்க சீப் மீது திடீர் பாசம் வந்துவிட்டது. அதனால்தான் இத்தகைய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரேவுக்கு அவுரங்கசீப் மீது திடீர் காதல் ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை. ஹிந்துத்துவாவுக்கு எதிரானவர்களை சத்திரபதி சிவாஜி மகாராஜ் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த 19 ஆம் தேதி மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழிவந்தவர்கள் அல்ல. நாட்டில் தேசியத்தை விரும்பும் முஸ்லிம்கள் எவரும் முகலாய பேரரசரான அவுரங்கசீப்பை அங்கீகரிக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
மகாராஷ்டிரத்தில் ஒரே ஒரு அரசர்தான் அவர் சத்திரபதி சிவாஜி மகராஜ்தான். அவரை முஸ்லிம்களும் மதித்து நடப்பார்கள் என்றும் பட்னவிஸ் குறிப்பிட்டிருந்தார்.
நமது அரசர் சத்திரபதி சிவாஜி மகராஜ்தான். மேலும் அவருக்கு மேலான ஒரு அரசர் இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும் அவுரசங்கசீப்பின் வழித்தோன்றல்கள் அல்ல. அவுரங்கசீப் மற்றும் அவரது வழிவந்தவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்றும் பட்னவிஸ் கூறியிருந்தார்.
முன்னதாக கடந்த 8 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரில் இளைஞர்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் அவுரங்கசீப் மற்றும் திப்புசுல்தான் படங்களை பதிவிட்டிருந்ததை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஆனால், போலீஸார் உரிய நேரத்தில் தலையிட்டு அங்கு கலவரம் வெடிக்காமல் தடுத்துவிட்டனர்.