சேப்பாக்கம் தொகுதி எம்எல்எ உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளார். காலை 9.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று திமுகவின் மூத்த அமைச்சர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அண்மையில், திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியின் முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உதயநிதியை அமைச்சரவையில் சேர்க்க, முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்து உள்ளதாகவும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டதாகவும் தெரிவித்தார். பதவியேற்பு நிகழ்ச்சி, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் என கூறியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு அரசியலில் தடம் பதித்த உதயநிதி ஸ்டாலின், 2019ம் ஆண்டு ஜூலையில் திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணிக் கட்சிகளுக்காக பிரசாரம் மேற்கொண்டார். பின்னர், 2021 சட்டப்பேரவை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, எம்எல்எ வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.