‘பிரதமர் மோடி பேச்சு குறித்து இந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு உதயநிதி அறிய வேண்டும்’ வானதி சீனிவாசன் பதில்!

‘பிரதமர் மோடி பேச்சு குறித்து  இந்தி தெரிந்தவர்களிடம் கேட்டு உதயநிதி அறிய வேண்டும்’ வானதி சீனிவாசன் பதில்!

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கோவை மாவட்டம், வடகோவை பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அந்த விழாவில் சில ஏழைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது காமராஜர் ஆட்சி. அதை பாஜக நினைவு கூறுகிறது. இன்று கல்வி வியாபாரமாக மாறி விட்டது. மாணவர்களுக்கு நல்ல கல்வியைத் தர வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்’ என்றார்.

அதைத் தொடர்ந்து, ‘பிரதமர் மோடி அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும்’ என்று கூறிவிட்டு 15 ரூபாய் கூட போடவில்லை என்று அமைச்சர் உதயநிதி பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ‘பிரதமர் என்ன பேசினார் என்பதை உதயநிதி முழுமையாகக் கேட்க வேண்டும். மோடி சொன்னதை இந்தி தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என தெரிவித்து விட்டு மாற்றிப் பேசுகின்றனர். மோடி பேசியதை உதயநிதி ஹிந்தி பண்டிட் வைத்து கேட்டுக்கொள்ள வேண்டும்’ என்று கூறி உள்ளார்.

மேலும் வானதி சீனிவாசனிடம், நடிகர் விஜய் மாணவர்களுக்கு இரவு நேர பாடசாலை துவங்கி இருப்பது குறித்துக் கேட்டபோது, ‘இரவு நேர பாடசாலை துவங்கி இருப்பது நல்ல விஷயம்தான். கல்விக்காக நல்லது செய்வதை வரவேற்கிறோம். இது போகப் போக என்ன மாதிரி செயல்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். சமூகத்துக்காக யார் என்ன பங்களித்தாலும் அதைப் பாராட்டுகிறேன்’ என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், ‘அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் தொடரும் என்றும், மறுபடியும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவரை யாராலும் தடுக்க முடியாது. எதிர்க்கட்சிகள் தேர்தல் என்று வரும்போது மட்டும் சேர்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள்கூட நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது மோடிக்குத்தான் வாக்களிக்கிறார்கள் என்றும், சந்திராயன் 3 இந்தியாவின் பெருமை, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகள்’ என்று பேசி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com