மாமன்னன் படத்தின் சமூகநீதி பிரச்சனை... பா.ரஞ்சித் கருத்துக்கு பதிலளித்த உதயநிதி!

மாமன்னன் படத்தின் சமூகநீதி பிரச்சனை... பா.ரஞ்சித் கருத்துக்கு பதிலளித்த உதயநிதி!
Published on

மாமன்னன் படத்தை பார்த்து விமர்சனம் தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு நடிகரும், அமைச்சருமான உதயநிதி பதிலளித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தோடு இனி நடிக்க போவதில்லை என அறிவித்த உதயநிதி ஒரு மாஸ் படத்தை மக்களுக்காக கொடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், மாமன்னன் படத்தை பார்த்த இயக்குனர் பா.ரஞ்சித், தனது ட்விட்டர் பக்கத்தில், மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன்.

உண்மையாகவே பெரும் பாராட்டுகுரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ். வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகர், அமைச்சர் மற்றும் திமுகவின் இளைஞர் மன்ற தலைவர் உதயநிதி ஸ்டாலின், `மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித்துக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம். ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா-கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவரும் இப்பணியைத் தொடர்கிறார்.

பராசக்தி'யில் தொடங்கி `மாமன்னன்' வரை கலைவடிவங்களிலும் `சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம். ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட.

ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மாமன்னன் படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சமூக வலைத்தளப்பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com