திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் முன்னிலையில் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் நிகழ்விற்கு செல்வதற்குமுன் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் தனது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தாயார் துர்கா ஸ்டாலினை அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன் பிறகு பதவியேற்பு விழா நடைபெறும் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு துர்கா ஸ்டாலின், கிருத்திகா, கனிமொழி என தனது குடும்பத்தினர் சகிதம் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் சென்றார்.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையை நேற்று முன் தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் ஹாலில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இன்று ஆளுநர் மளிகை எதிரே ஏராளமான கட்சிக்காரர்கள் நின்றிருந்தனர். அவர்கள் உதயநிதியின் முகம் தாங்கிய பதாகைகளை பிடித்தபடி நின்றிருந்தனர்.
அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழை குவிகிறது. அவருக்கு திமுகவின் மூத்த அமைச்சர்களும், சக கட்சிக்காரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். திமுக எம்பியும் முக.ஸ்டாலின் அவர்களின் சகோதரியும் , உதயநிதி ஸ்டாலினின் அத்தையுமான கனிமொழி அவர்கள் உதயநிதிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.