இங்கிலாந்தில், ஸ்டாஃபோர்டுஷயர் என்னுமிடத்தில் லீ ஹெயன்ஸ், ஜோ உட்லீ தம்பதிகள் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பிறகு சமையல் எரிவாயு பயன்படுத்தியதற்காக ரூ.11 லட்சம் கட்டணம் செலுத்துமாறு பில் வந்துள்ளது கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டில் தம்பதிகள் அந்த வீட்டில் குடிபுகுந்தனர். வீட்டிற்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் ஏஜென்சி எது, அதற்கு கட்டணம் எப்படிச் செலுத்த வேண்டும் என்று பலமுறை முயன்றும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கு எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் குழப்பத்தில் இருந்த அவர்கள், வருவது வரட்டும் என்று மேற்கொண்டு அதைப் பற்றி விசாரிக்காமல் பேசாமல் இருந்துவிட்டனர். ஆனால், இப்போது அதாவது 18 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு 10,824.87 பவுண்டுகள் (அதாவது இந்திய ரூபாயில் 10,88,883) செலுத்துமாறு பில் வந்துள்ளது.
2005 ஆம் ஆண்டு அந்த வீட்டுக்கு குடியேறியபோது உடனடியாக வீட்டில் வசிப்பது தொடர்பான அனைத்து கட்டணங்களை அவர்கள் முறைப்படுத்தினர். ஆனால், சமையல் எரிவாயு எங்கிருந்து சப்ளை ஆகிறது என்பதை மட்டும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தேசிய எரிவாயு தொகுப்பு மற்றும் வீட்டு வசதி சங்கம் என பல இடங்களில் கடிதம் மூலம் தொடர்பு கொண்டும் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை.
லீ ஒரு பள்ளியில் வேலை செய்கிறார். அவர் சொல்கிறார், “புதிய வீட்டில் குடியேறியதும் எங்களுக்கு அனைத்து குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் என அனைத்து பில்களும் எனக்கு சரியாக வந்தன. சமையல் எரிவாயு பில் கட்டணம் மட்டும் வரவில்லை. இப்போது திடீரென்று ரூ.11 லட்சம் கட்டுமாறு சொல்கின்றனர். எங்களுக்கு கவலையாக இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார்.
எங்களுக்கு சமையல் எரிவாயுவை யார் சப்ளை செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயன்றோம் முடியவில்லை. வீட்டு வசதி சங்கத்தின் மூலமும் தொடர்புகொண்டோம் அதுவும் பலனளிக்கவில்லை. கடைசியில் குறைகேட்கும் அதிகாரியை தொடர்பு கொண்டபோது புகார் கொடுங்கள் பார்க்கலாம் என்றார். அதைச் செய்துவிட்டு வந்துவிட்டோம். அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் எரிவாயு விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து கடிதம் வந்தது. அங்கிருந்து ஒருவர் வந்து வீட்டை பார்த்துவிட்டுப் போனார். மூன்று மாதம் கழித்து ரூ.11 லட்சம் கட்டணம் செலுத்துமாறு கூறி பில் அனுப்பினர் என்றார்.