உக்ரைன் ரஷ்யா போரின் 500வது நாள்: பாம்புத்தீவுக்கு வருகை தந்த செலன்ஸ்கி!

உக்ரைன் ரஷ்யா போரின் 500வது நாள்: பாம்புத்தீவுக்கு வருகை தந்த செலன்ஸ்கி!

க்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதல் தொடங்கி இன்று 500ஆவது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கருங்கடல் பாம்புத் தீவுக்கு திடீர்ப் பயணம் செய்துள்ளார். அங்கிருந்தபடி அவர் பேசிய காணொலி ஒன்று இன்று (சனிக்கிழமை) வெளியாகி பரவலாகி வருகிறது.

காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேசியதாவது, ” இன்று நாங்கள் பாம்புத் தீவில் இருக்கிறோம். ஒட்டுமொத்த உக்ரைனைப் போலவே இந்தத் தீவையும் ஆக்கிரமிப்பாளர்கள் வென்றுவிட முடியாது. ஏனென்றால் நாங்கள் வீரமான நாட்டைச் சேர்ந்தவர்கள்.” என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அந்தக் காணொலிப் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஐந்நூறு நாள்களிலும் போரிட்டு நாட்டைக் காப்பதற்காக வெற்றிகரமான இந்த இடத்திலிருந்து நம் படையினர் ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் செலன்ஸ்கி கூறினார். தேதியிடப்படாத இந்தக் காணொலியில், பாம்புத் தீவுக்கு படகு ஒன்றின் மூலம் சென்று செலன்ஸ்கி இறங்குவதும் அங்குள்ள நினைவிடம் ஒன்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்துவதும் காணக்கூடியதாக உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அன்று உக்ரைனின் பாம்புத் தீவில் ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்தன. சரண் அடையுமாறு வானொலியில் ரஷ்யக் கடற்படையினர் அறிவித்ததை உக்ரைன் படையினர் மறுத்துவிட்டனர். ரஷ்யப் படையினரையும் கடுமையாக அவர்கள் திட்டிய காட்சிகள் உலக நாடுகளின் ஊடகங்களில் அப்போது வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆனாலும் அந்த உக்ரைன் வீரர்களை ரஷ்யப் படை கைதுசெய்தது. பின்னர் ஏற்கெனவே பிடித்து வைக்கப்பட்டு இருந்த ரஷ்யக்காரர்களை விடுவிக்க உக்ரைன் முன்வந்ததால் இவர்களும் விடுவிக்கப்பட்டனர். அடுத்த இரண்டாவது மாதத்தில் ரஷ்யக் கப்பல் ஒன்று கருங்கடலில் சென்றுகொண்டு இருந்தபோது தீப்பிடித்து மூழ்கியது. அந்தக் கப்பலுக்குள் ஏற்பட்ட வெடிப்பே காரணம் என ரஷ்யாவும், தாங்களே அதை ஏவுகணைகளால் தாக்கி அழித்ததாக உக்ரைனும் கூறிக்கொண்டன.

ஓராண்டுக்கும் மேல் நீடிக்கும் போரில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 500 பேர் குழந்தைகள் என்று உக்ரைனில் உள்ள ஐநா மனிதவுரிமை கண்காணிப்பு அமைப்பு போருக்கு எதிரான கண்டனத்தையும் மீண்டும் தெரிவித்துள்ளது.

போர்த் தாக்குதல்கள் கடந்த ஆண்டை ஒப்பிட சற்று குறைந்துள்ளன. கடந்த மே, ஜூன் மாதங்களில் மீண்டும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜூன் 27ஆம் தேதி கிழக்கு உக்ரைனில் கிரம்மாட்டார்ஸ்க் எனும் ஊரில் ஏவுகணைத் தாக்குதலால் நான்கு குழந்தைகள் உள்பட 13 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

மேற்கு நகரமான லீவில் கடந்த வியாழன் அன்று இதுவரை இல்லாதபடியாக பெரும் வான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதன் மேயர் அந்திரேய் சடோவ்யி தெரிவித்துள்ளார். அதில் 37 அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர். நேற்று வெள்ளியன்று ஏவுகணைத் தாக்குதலால் இடிந்துபோன கட்டடத்தில் இருந்து பத்தாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தப் பின்னணியில்தான் செலன்ஸ்கியின் பாம்புத் தீவுப் பயணம் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com