உக்ரைன் ரஷ்யா போரில் தற்போது வடகொரியா ரஷ்யா பக்கம் இணைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ரஷ்யா உக்ரைன் போர் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. இரு நாடுகளுமே போரை நிறுத்த முன்வருவதாக தெரியவில்லை. ரஷ்யா பொருளாதாரத்தில் பெரிய நாடு என்பதால், உக்ரைனை பலம் வாய்ந்த அயுதங்களுடன் தாக்கி வருகிறது. மேலும் உக்ரைனை சிறிது காலத்திலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணிய ரஷ்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பொருளாதார ரீதியாக ரஷ்யாவைவிட மிகவும் பின்தங்கி இருக்கும் உக்ரைன் இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடித்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் உதவி செய்தும் வருகின்றன. உக்ரைனின் முக்கிய நகரங்கள், ஆற்றல் ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுவரை, உக்ரைன் தனது கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 225 சதுர மைல் அளவு பகுதியை ரஷ்யாவிடம் இழந்துள்ளது. தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா அவ்வபோது சில கிராமங்களையும் கைப்பற்றி வருகிறது. சமீபத்தில்கூட மேலும் இரண்டு கிராமங்கள் கைப்பற்றப்பட்டன.
இதில் ரஷ்யா சில இந்தியர்களை கட்டாயத்தின் அடிப்படையில் போர் செய்ய வைத்தது. அவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் பிரதமர் மோடி உள்ளார். அந்தவகையில் தற்போது உக்ரைனுக்கு எதிராகவும், ரஷ்யாவிற்கு ஆதரவாகவும், ரஷ்யா படைக்கு சுமார் 10 ஆயிரம் வடகொரியர்களை அனுப்பியிருக்கிறது வடகொரியா. அதில் ஒரு பகுதியினர் ஏற்கனவே போரில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்த வடகொரியப் படைகள் குர்ஸ்க் எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதாக நேட்டோ உறுதிசெய்துள்ளது. இது சட்டவிரோதம் என்றும், இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தானது என்றும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரை இரு தரப்பினருக்குமே துணையாக இல்லை. இருநாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. அதாவது எந்த நாட்டுக்கும் ஆதரவு தெரிவிக்காமல், ஒரு நாடு சொல்லும் செய்திகளை மற்றொரு நாட்டுக்கு சொல்லி வருகிறது. அதுவும் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே பரிமாறி வருகிறது.