உக்ரைனின் ககோவ்கா அணை தாக்குதல்...!

உக்ரைனின் ககோவ்கா அணை  தாக்குதல்...!

உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது .இந்த தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்த சம்பவம் உலகத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், இன்றைய தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் உதாரணம். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.

குடிநீர், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

ககோவ்கா அணையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக 150 டன் என்ஜின் ஆயில் டினிப்ரோ ஆற்றில் கலந்து விட்டதாகவும், இதனால் சுற்றுச் சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும் உக்ரைன் எச்சரித்துள்ளது.

உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரி டரியா ஜரிவ்னா தெரிவிக்கையில், 150 டன் என்ஜின் ஆயில், குண்டு வெடிப்பின் காரணமாக டினிப்ரோ நதியில் பாய்ந்து கலந்து விட்டது என்றார். மேலும் 300 டன் எண்ணெய் ஆற்றில் கலக்கும் அபாயம் இருப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணெய் ஆற்றில் கலப்பதின் விளைவாக இப்பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நீண்டகால மற்றும் மாற்ற முடியாத சேதாரத்தை ஏற்படுத்தி விடும் என உக்ரைனின் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிகரித்து வரும் நீரின் அளவால் நோவா காகோவ்கா மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அணை உடைந்து, தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால் கரையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சுமார் 42 ஆயிரம் பேர் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com