
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தங்களுடைய கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்யும் பிரபல தலைவர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த பட்டியலில் முன்னாள் முதல்வரும், 2003 ஆம் ஆண்டில் ம.பி.யில் பா.ஜ.க.வுக்கு வரலாற்று வெற்றியைத் தேடித்தந்தவருமான உமா பாரதியில் பெயர் இடம்பெறவில்லை.
பா.ஜ.க.வுக்காக தேர்தல் பிரசாரம் செய்யும் பிரபல தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 15 மத்திய அமைச்சர்கள், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், உ.பி. மாநில துணை முதல்வர்கள் பிரிஜேஷ் பதக், கேசவ் பிரசாத் மெளரியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் ம.பி. மாநில முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்களும் மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மாவும் இடம்பெற்றுள்ளனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் அதைத் தொடர்ந்து 2020 இல் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வுக்காக தீவிர பிரசாரம் செய்த உமாபாரதி பெயர் தலைவர்கள் பிரசார பட்டியலில் இடம்பெறவில்லை.
ம.பி.யில் உள்ள திகம்பர் மாவட்டத்தில் உள்ள தமது கிராமத்திலிருந்து இமயமலைக்கு யாத்திரை செல்ல இருப்பதாக உமாபாரதி அறிவித்திருந்த நிலையில் பா.ஜ.க. பிரமுகர்களின் பிரசார பட்டியல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற விருப்பத்தை அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார்.மகளிர்க்கு நாடாளுமன்றத்திலும் சட்டப்பரேவையிலும் 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் உமாபாரதி வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.