திருச்சி மாநகரத்தில் இறுதிக் கட்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் - கைகொடுக்கும் மத்திய அரசின் அம்ருத் திட்டம்!

திருச்சி மாநகரத்தில் இறுதிக் கட்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் - கைகொடுக்கும் மத்திய அரசின் அம்ருத் திட்டம்!

திருச்சியில் கடந்த 20 ஆண்டுகளாக நிறைவேற்றுப்பட்டு வந்த பாதாள சாக்கடைத் திட்டங்கள் இவ்வாண்டு நிறைவுக்கு வர இருக்கின்றன. இதுவரை திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படாத இடத்தில் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் அம்ருத் திட்டம் கைகொடுக்க முன் வந்திருக்கிறது. இறுதிக்கட்டமாக 30 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடைய இருக்கின்றன.

ஸ்ரீரங்கத்தை திருச்சி மாநகராட்சியில் சேர்த்த பின்னர் முதல்முறையாக பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் 1997, 2001 உள்ளிட்ட காலகட்டங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திருச்சி மாநகராட்சி ஐந்து மண்டலம் கொண்டதாக மாற்றப்பட்டது. முன்னர் திருச்சி மாநகராட்சியில் அரியாமங்கலம், பொன்மலை, கே.அபிஷேகபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய 4 மண்டலங்கள் மட்டுமே இருந்தன. இந்நிலையில், திருவெறும்பூர் பகுதி 5ஆவது மண்டலமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

முந்தைய ஸ்ரீரங்கம் மண்டலத்தில் இருந்த மலைக்கோட்டை, தேவதானம் மற்றும் திருவானைக்கோயில் போன்றவை தற்போது முதலாவது மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரியாமங்கலம் மண்டலத்தில் இருந்த சில பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு இரண்டாவது மண்டலமாக உருவானது. இதில் சுப்பிரமணியபுரம், மன்னார்புரம் மற்றும் கொட்டாப்பட்டு ஆகிய பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக எத்தனை மண்டலங்களில் பாதாள சாக்கடைத் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்கிற முடிவுக்கு வரமுடியவில்லை. ஒரு சில இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டால் ஏறக்குறைய 3 மண்டலங்களில் முழுமையாக பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பாக கொள்ள முடியும்.

2018ல் 344 கோடி செலவிலும், 2019ல் 366 கோடி செலவிலும் மூன்றாவது கட்டமாக பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டது. திருச்சி மாநகரத்தின் ஐந்து மண்டலங்களில் 30 வார்டுகள் தவிர பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மூன்றாவது கட்டமான இறுதிக் கட்ட பணிகளுக்கு அம்ருத் திட்டத்தின் படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அம்ருத் எனப்படும் அடல் புத்தாக்கம் மற்றும் நகர்ப்புற மாற்ற இயக்கம், 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதுமுள்ள முக்கியமான நகரங்களில் குடிநீர் விநியோகம், கழிவு நீர் அகற்றல், கழிவு மேலாண்மை, மழை நீர் வடிகால், பசுமை வெளிகள், பூங்காக்கள், நகர்ப்புறப் போக்குவரத்து ஆகிய அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. 80 ஆயிரம் கோடி வரை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் செயல்படுத்துகிறது.

முதல் மூன்று கட்டங்களில் திருச்சி மாநகரத்தில் செய்து முடிக்காத பணிகளை தற்போது அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த முக்கியத்துவம் தரப்படுகின்றன. நான்காவது கட்ட பணிகளும் நிறைவடைந்துவிட்டால் தமிழகத்திலேயே 95 சதவீதம் பாதாள சாக்கடை பணிகளை நிறைவேற்றிய ஒரே மாநகராட்சியாக திருச்சி இருக்கப் போகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com