பிளாஸ்டிக்கில் சீருடை; இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் புது முயற்சி!

பிளாஸ்டிக் சீருடை
பிளாஸ்டிக் சீருடை

இந்தியாவின் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 405 டன் அளவிலான பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து, அவற்றை பாலிகாட்டன் துணியாக மாற்றி சீருடைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உடைகளில் ‘கோ க்ரீன்’ என்ற விழிப்புணர்வு வாசகம் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த சீருடையை இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் டெலிவரி பணியாளர்களுக்கு வழங்குவதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்தியா கூறியதாவது;

நாட்டில் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் இதர அமைப்புகளிடம் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கை, பருத்தி சேர்த்து மறுசுழற்சி செய்து, அதில் இருந்து பாலிகாட்டன் சீருடை தயாரிக்கப்பட உள்ளது.

அந்த வகையில் 2046-ம் ஆண்டுக்குள் இந்தியாவில்  சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஜீரோ நிலைக்கு கொண்டு வர இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த சீருடைகள் எங்களுடைய பசுமை இலக்கை பிரதிபலிப்பதாக அமையும்.

எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால், 2050-ம் ஆண்டுக்குள் கடலில் மீன்களைக் காட்டிலும் பிளாஸ்டிக் கழிவுகள்தான் அதிகமிருக்கும். எங்களைப் பொறுத்தவரை, பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இந்த சீருடைகள் விர்ஜின் பாலிஸ்டர் துணிகளுக்கு ஈடான தரத்தில் இருக்கும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com